
‘காதலிக்க நேரமில்லை’ படத்தை காதலிக்கலாமா? கழற்றி விடலாமா?: திரை விமர்சனம்
நேற்றைய இன்றைய நாளைய என என்றைய காதலாய் இருந்தாலும், இந்த புனிதப் பயணம் கல்யாணமாகி குழந்தை பெறுதலில்தானே இருக்கிறது இல்லற நிலை.
இத்தகு ‘காத்தல்’ வாழ்வியலைதான் ‘காதலிக்க நேரமில்லை’ என இயக்கியிருக்கிறார் கிருத்திகா உதயநிதி. இனி விமர்சனத்திற்குள் புகுவோம்.!
பெங்களூருவில் வசிக்கும் சித்தார்த் (ஜெயம் ரவி), குழந்தைகள் என்றால் விருப்பம் இல்லாதவர். இவர், தனது நண்பர்களான வினய், யோகிபாபுவுடன் இணைந்து ‘விந்து தானம்’ செய்கிறார்.
இதனால் காதலி (பானு), சித்தார்த்தை வெறுத்து நிச்சயமாக வேண்டிய நாளில் பிரிந்து செல்கிறார்.
இச்சூழலில், சென்னையில் வசிக்கும் ஸ்ரேயா (நித்யா மேனன்) தன்னுடைய காதலர் (ஜான் கொகன்) வேறொரு பெண்ணுடன் தகாத உறவு வைத்திருந்ததால், அவரை விட்டுப் பிரிகிறார்.
ஆண் துணையையே வெறுத்து, அதே நேரம் குழந்தை பெற்றுக் கொள்ளவும் விரும்பிய ஸ்ரேயா ‘டெஸ்ட் டியூப்’ மூலமாக கர்ப்பமாகிறார்.
பின்னர், பிறக்க இருக்கும் குழந்தைக்கு அப்பா யார்? என தெரிந்துகொள்ள பெங்களூரூ வருகிறார். இதற்குப் பிறகு என்னென்ன சீன்ஸ் இருக்கும்? அதான்.. சித்தார்த்துடன் நட்பாகி, காதலாகி கசிந்து, அப்புறம்.. சித்தார்த்துக்கு ‘குழந்தை என்றால் பிடிக்காது’ என தெரிந்து.. உடனே பிரிகிறார்.
சென்னையில், ஷ்ரேயா குழந்தை பெற்றுக்கொண்டு ‘தனி வீட்டு ராணியாக’ எட்டு வருடங்களாய் இல்லறம்? நடத்துகிறார்; அவருக்குள்ளேயே அவர் வாழ்கிறார்.
இந்நிலையில், ஸ்ரேயாவை சந்திக்கிறார் சித்தார்த். ‘மறுபடியும் முதல்ல இருந்தா?’ என்பது போல மீண்டும் காதல் உண(ர்)வை கை நிறைய அள்ளி, பழக ஆரம்பிக்கிறார்கள். இதில், இவர்கள் கருத்தொருமித்து ஒன்றாய்க் கலந்தார்களா? குழந்தையானது ரவிக்கு பிறந்தது என தெரிந்து நெகிழ்ந்தார்களா? என்பதுதான் மீதியான காதலின் நீதிக்கதை.
படத்தில், ஜெயம் ரவியும் நித்யா மேனனும் வாய்பேசும் மெழுகுச்சிலைகளாய் மொழு மொழு வாளிப்புடன் அழகாய் நடித்து உருகியிருக்கிறார்கள். நித்யாவுக்கு பெற்றோரான மனோ- லட்சுமி ராமகிருஷ்ணன் தம்பதியர் குணச்சித்திரமாய் வந்து போகிறார்கள்.
யோகிபாபு தன்னால் இயன்ற காமெடியை வழங்க முயற்சி செய்திருக்கிறார். ஓரினச் சேர்க்கையாளராக வினய் காட்டப்பட்டிருப்பது, கதைக்கு அப்படியென்ன அவசியமோ? பெரும்பாலான காட்சிகள் யூகிக்கும் வகையிலேயே உள்ளன.
கேட்ட ஒரு கேள்விக்கு, ஓடிக் களைத்த ஒருவன் ஸ்லோமோஷனில் பதில் அளிப்பதைப் போல, சோர்ந்து நகரும் திரைக்கதை சலிப்பைத் தருகிறது.
இரண்டாம் பாதியில் காதலே ‘கரு’வாகக் கொண்ட கதையோட்ட வளர்ச்சியில் “பிறந்த” குழந்தை நட்சத்திர நடிப்பினால் போரடிக்காமல் போகிறது.
ஏ.ஆர்.ரகுமானின் இசையும், கேவ் மிக்யூ ஆரியின் ஒளிப்பதிவும் படத்திற்கு ஹை லெவல் பலம். ஃபென்டாஸ்டிக் மியூசிக்; ரிச்சான மேக்கிங்.
மொத்தத்தில் இப்படத்தை பொறுத்தவரையில், ஜெயகாந்தன் சார் சொன்னது போல ‘காதல் தோன்றுவதற்கும் முறிந்து போவதற்கும் அற்பமான காரணங்களே போதுமானது’ என்ற வாசகம் நினைவுகூரத்தக்கது.
'காதலிக்க நேரமில்லை' படத்தை காதலிக்கலாமா, கழற்றி விடலாமான்னா.. கண்டிப்பாக நேரம் ஒதுக்கி கைகோர்க்கலாம், குழந்தை மனசாகி உறவாடலாம்.!
- Rating