வெல்லட்டும் பெண் சக்திகள்: கிரிக்கெட் வீராங்கனை ஜெமிமாவுக்கு பார்த்திபன் வாழ்த்து..
இந்தியாவில் நடந்து வரும் 13-வது மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. இதில் மராட்டிய மாநிலம் நவிமும்பையில் உள்ள டி.ஒய்.பட்டீல் ஸ்டேடியத்தில் நடந்த 2-வது அரையிறுதியில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதின.
இதில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 49.5 ஓவர்களில் 338 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக லிட்ச்பீல்ட் 119 ரன்கள் அடித்தார். இந்திய தரப்பில் சுழற்பந்து வீச்சாளர்கள் ஸ்ரீசரனி, தீப்தி ஷர்மா தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.
அடுத்து, 339 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மெகா இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 48.3 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 341 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதோடு 3-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
ஜெமிமா ரோட்ரிக்ஸ் 127 ரன்களுடனும் (134 பந்து, 14 பவுண்டரி), அமன்ஜோத் கவுர் 15 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஆட்ட நாயகியாக தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்த ஜெமிமா ரோட்ரிக்சுக்கு நாடு முழுவதிலும் இருந்து பல முன்னாள் வீரர்கள், பிரபலங்கள் மற்றும் நடிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்ற
அந்த வரிசையில் நடிகர் பார்த்திபன் ஜேமிமா ரோட்ரிக்சை பாராட்டி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ‘ஒரு குழந்தையின் முதல் அழுகையை பெற்றெடுத்த ஒரு தாயின் அழுகையில் வெளிப்படும் தெய்வீகத் தாய்மை போல… இவ்வெற்றியை பெற்றெடுத்த ஜெமிமா ரோட்ரிக்சின் கண்களில் பெருமை பேரூற்றை நீரூற்றாய் காண்கிறோம்.
அவர் ஜீசஸ் (Jesus) மீது நம்பிக்கை வைப்பது போல, உலக கோப்பைக்கு இந்தியாவே அவரை நம்புகிறது. நம்பிக்கை > பந்தை மட்டையில் பட வேண்டுமானால் செய்யலாம், ஆனால் அதை பவுண்டரிக்கு அடித்துத் துரத்தவும், ஓடி ரன்னை அடித்துத் துவைக்கவும் கூடுதல் உத்வேக உழைப்பு தேவைப்படுகிறது. வெல்லட்டும் பெண் சக்திகள். ஒரு பெண்ணின் வெற்றிக்குப் பின்னால் நம் சமூகமே சிகரமென உயரம் தொடும்! அறிந்தார் சீராய் மொழி பெயர்த்திடுக!’ என்று பார்த்திபன் பதிவிட்டுள்ளார்.

