இது எளிமையும் அல்ல அழகுமல்ல என வாரிசு இசை வெளியீட்டு விழாவில் விஜயை கண்டு அட்வைஸ் கொடுத்துள்ளார் பிரபல இசை அமைப்பாளர் ஜேம்ஸ் வசந்த்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ள திரைப்படம் வாரிசு.

தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிப்பில் தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் ஜிப்ரான் இசையமைப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வாரிசு. பொங்கல் விருந்தாக ஜனவரி 11ஆம் தேதி இந்த திரைப்படம் வெளியாக இருப்பதாக சொல்லப்பட்டு வரும் நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த வாரம் சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து நேற்று சன் டிவியில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பானது. இந்த இசை வெளியீட்டு விழாவில் தளபதி விஜய் எந்தவொரு மேக்கப்பும் இல்லாமல் சாதாரணமாக பங்கேற்று இருந்தார். இந்த நிலையில் இதுகுறித்து இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்த் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவரது முகநூல் பதிவில் ‘வாரிசு’ பட விழா தொலைக்காட்சியில் போய்க்கொண்டிருந்தது. தற்செயலாக ஒரு கணம் எட்டிப்பார்த்தேன். விஜய் பேசிக்கொண்டிருந்தார். முதல் பார்வையிலேயே அவர் தோற்றம் மனதைச் சற்று நெருடியது.தலையை இன்னும் கொஞ்சம் சீர்படுத்தி, தாடியைக் கொஞ்சம் நெறிபடுத்தி, இந்த பிரம்மாண்ட விழாமேடைக்கேற்ற உடையணிந்திருக்கலாம் என்று தோன்றியது.

அது எளிமை என்று அவர் நினைத்திருக்கலாம்; அல்லது அவர் ரசிகர் வாதிடலாம். Simplicity and appropriateness are two different things. எளிமையும், அவைப் பொருத்தமும் வெவ்வேறு விஷயங்கள்.இதைப் பொதுவாகத்தான் சொல்கிறேன். நாம் ஒரு வேலைக்கு, நேர்முகத் தேர்வுக்கு போகும்போது ஏன் அவ்வளவு பொறுப்பாக பார்த்துப் பார்த்து உடையணிந்து செல்கிறோம்? ஒவ்வொரு இடத்துக்கும் ஏற்ற தோற்ற வரைமுறை உண்டுதானே?

ஒரு நடிகனின் ஒவ்வொரு அசைவையும் அப்படியே கிரகிக்கிற, பின்பற்றுகிற பாமர ரசிகர்மேல் கதாநாயகர்கள், அதுவும் விஜய் போன்ற உச்சபச்ச நாயகன் ஏற்படுத்துகிற தாக்கம் அதி தீவிரமானது. தன் திரை நாயகனை அன்றாட வாழ்வில் ஒவ்வொரு அசைவிலும் பிரதிபலிக்கிற கடைநிலை இளைஞனுக்கு சொல்லாமல் சொல்லிக் கொடுக்கவேண்டிய விஷயங்களில் இதுவும் ஒன்று.

எந்த நிகழ்வுக்கு எப்படி உடையணிந்து செல்லவேண்டும் என்பதை அவன் எங்கே போய் கற்றுக்கொள்வான்? சினிமாவும், கிரிக்கெட்டும் உயிர்மூச்சாக ஆகிவிட்ட இந்தியாவில் இத்துறைகளில் உள்ளவர்க்கென்று சில பொறுப்புகள் உள்ளன, நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும். நீங்கள் திரைப்படங்களில் எல்லாவித ஆடம்பர ஆடைகளையும் அணிந்து சலித்துப்போய் நிஜவாழ்வில் இப்படி எளிமையாக இருக்க விரும்புவதையும் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனாலும் பொதுமேடையாயிற்றே. வெறித்தனமான இளைஞன் உங்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறானே.

ஹாலிவுட்டிலும் பாலிவுட்டிலும், ஆந்திராவிலும் கூட யாருமே இந்த அம்சத்தில் அலட்சியம் காட்டுவதில்லை. நட்சத்திரங்கள் வசதியானவர்கள் என்பது வெட்ட வெளிச்சந்தானே. யாரும் உங்களைத் தவறாக நினைக்க மாட்டார்கள். தன் நாயகன் அழகாக வந்தால் முதலில் மகிழ்பவன் உங்கள் ரசிகன் தான்!முறையான அரங்க நிகழ்வுகளில் நன்கு அலங்கரித்து வாருங்கள். விடுமுறைகளில் மனம்போல் அணிந்து மகிழுங்கள். இந்த நடைமுறை வரைமுறைகளை உங்களைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றும் இளைஞருக்குக் கற்றுக்கொடுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.

இவருடைய இந்த பதிவு சமூக வலைதளத்தில் விவாதமாக மாறி உள்ளது. இதுகுறித்து நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.