துபாய்: சூப்பர் 4 சுற்றில் த்ரில்லாக நடந்த ஆட்டத்தில் இந்தியாவை சமன் செய்து அசத்தியது ஆப்கானிஸ்தான்.துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பேட் செய்தது. இந்திய அணியில் ரோகித், தவான், பூம்ரா, புவனேஷ்வர், சாஹல் ஆகியோருக்கு பதிலாக தீபக் சாஹர் அறிமுகமானார்.
ராகுல், பாண்டே, சித்தார்த், கலீல் இடம் பெற்றனர். ஆப்கானிஸ்தான் இன்னிங்சை முகமது ஷஷாத், ஜாவேத் அகமதி தொடங்கினர். ஒரு முனையில் ஷஷாத் அதிரடியாக விளையாடி ரன் குவிக்க… மற்றவர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினர். ஆப்கானிஸ்தான் 28.4 ஓவரில் 132 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்து தடுமாறியது.
எனினும், உறுதியுடன் விளையாடி இந்திய பந்துவீச்சை சிதறடித்த முகமது ஷஷாத் 88 பந்தில் 10 பவுண்டரி 6 சிக்சருடன் தனது 5வது சதத்தை விளாசி அசத்தினார். அவர் 124 ரன் (116 பந்து, 11 பவுண்டரி, 7 சிக்சர்) எடுத்து கேதார் சுழலில் கார்த்திக் வசம் பிடிபட்டார்.
அடுத்து களமிறங்கிய இந்திய அணியில் கே.எல்.ராகுல் 60, அம்பாதி ராயுடு 57, தினேஷ் கார்த்திக் 44 ரன் எடுத்தனர். கேப்டன் டோனி 8, மணீஷ் பாண்டே 8, கேதார் 19 ரன்னுடன் ஏமாற்றமளித்தனர்.
கடைசி ஓவரில் ஒரு விக்கெட் மட்டுமே கைவசம் இருக்க 7 ரன் எடுத்தால் இந்தியா வெற்றி என்ற பரபரப்பான கட்டத்தை ஆட்டம் எட்டியது.ரஷித்கான் வீசிய இந்த ஓவரின் 2வது பந்தில் ஜடேஜா பவுண்டரி விளாச இந்திய ரசிகர்கள் ஆரவாரம் எழுப்பினர். எனினும் 5வது பந்தில் ஒரு ரன் தேவை என்ற நிலையில், ஜடேஜா (25) விக்கெட்டை வீழ்த்தி ஆட்டத்தை ‘டை’ செய்தார் ரஷித்கான். இந்திய அணி 49.5 ஓவரில் 252 ரன் எடுத்து ஆல் அவுட்டானது.