பொய்யான குற்றச்சாட்டு, நான் தங்கம் கடத்தவில்லை: நடிகை ரன்யா ராவ் திடீர் பல்டி
வாழ்க்கையில் ரீல் நடிப்பும் உண்டு, ரியல் நடிப்பும் உண்டு. இவைகளை கண்டு தெளிவது நன்று. இனி, விஷயத்திற்கு வருவோம்..
‘தங்கம் கடத்தல் வழக்கில் தன் மீது பொய்யான வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, வேறு யாரையோ பாதுகாக்க என்னை குற்றவாளியாக கருதுகிறார்கள்’ என்று நடிகை ரன்யா ராவ் சிறை அதிகாரிகளுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு தங்கம் கடத்திய வழக்கில் டிஆர்ஐ அதிகாரிகளால், நடிகை ரன்யா ராவ் கைது செய்யப்பட்டு பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹார மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
முன்னதாக, அடையாளம் தெரியாத ஒருவரின் அறிவுறுத்தலின் பேரில் துபாயிலிருந்து தங்கத்தை கொண்டு வந்ததாக, அவர் டிஆர்ஐ விசாரணையின் போது கூறியதாகவும், ஆனால் இப்போது அவர் மீது பொய்யான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு உள்ளதாகக் கூறி பதிலளித்து உள்ளதாகவும் தெரிகிறது.
ரன்யா ராவ் எழுதிய கடிதத்தை சிறைத்துறை அதிகாரிகள் டிஆர்ஐ விசாரணைக்கு அனுப்பியுள்ளனர். ஆனாலும் கூட அந்த கடிதத்தை சிறைத்துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தவில்லை.
நான் ரியல் எஸ்டேட் வேலைக்காக துபாய் சென்றேன். மார்ச் 3 ஆம் தேதி நான் அங்கிருந்து திரும்பியபோது, தங்கம் எதுவும் கொண்டு வரவில்லை. ஆனால், யாரோ ஒருவரைப் பாதுகாப்பதற்காக, சிலர் என் மீது தங்கக் கடத்தல் குற்றச்சாட்டு சுமத்தியுள்ளனர்.
இந்த விவகாரத்தை விசாரித்து நீதி வழங்குமாறு சிறை அதிகாரிகளிடம் ரன்யா கோரிக்கை விடுத்ததாகக் கூறப்படுகிறது. நடிகை ரன்யா ராவ் ஐபிஎஸ் அதிகாரியின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.