விஜய்யின் ‘கில்லி’ அஜித்தின் ‘துணிவு’ ரீ-ரிலீஸ்: ரசிகர்கள் உற்சாகம்..
விஜய்யின் கடைசிப் படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ படம் தணிக்கை சான்றிதழ் பிரச்சினை தொடர்பாக நீதிமன்ற வழக்கில் உள்ளது.
இச்சூழலில் அஜித் மலேசியாவில் நடைபெறும் கார் பத்தயங்களில் கலந்துகொண்டு வருகிறார். இவரது அடுத்த படத்தை மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளார். அவ்வகையில் இவர்களின் ரசிகர்களை திருப்திப்படுத்தும் நோக்கில் ரீ ரிலீஸ் படங்கள் வருகின்றன. சமீபத்தில் காதலர் தினத்தை முன்னிட்டு மின்னலே, காதலர் தினம், உயிருள்ளவரை உஷா, தெறி ஆகிய படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்பட்டன.
இந்நிலையில், ஏற்கனவே ‘கில்லி’ மறுவெளியீடு செய்யப்பட்டு வசூல் சாதனை புரிந்தது. தற்போதுள்ள சூழலை பயன்படுத்தி பிப்ரவரி 20-ந்தேதி மீண்டும் ரீ-ரிலீஸ் ஆகிறது ‘கில்லி’. ரீ ரிலீஸ் ஆன படம், மீண்டும் ரீ ரிலீஸ் செய்யப்படுவது இதுவே முதன் முறையாகும். அதே தேதியில் அஜித் நடித்த ‘துணிவு’ படமும் வெளியாகும் என்று விநியோகஸ்தர் மற்றும் தயாரிப்பாளர் ராகுல் அறிவித்துள்ளார். இதனால், அன்று விஜய், அஜித் படங்கள் மோதல் உறுதியாகி இருக்கிறது. இந்நிகழ்வு இருவரின் ரசிகர்களை திருப்திப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் 9-ந்தேதி விஜய்யின் ‘ஜனநாயகன்’ வெளியாவதாக இருந்தது. ஆனால், தணிக்கை பிரச்சினையில் வெளியாகாமல் இருக்கிறது. விரைவில் அனைத்து பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
