‘ஜனநாயகன்’ விஜய்க்கு நாளை மறுநாள் முதல், மத்திய அரசின் Y பிரிவு பாதுகாப்பு
தவெக தலைவர் விஜய்க்கு, மத்திய அரசின் Y பிரிவு பாதுகாப்பு வருகிறது. இது குறித்த தகவல்கள் காண்போம்..
விஜய் நடிப்பில் அரசியல் பேசும் ‘ஜனநாயகன்’ திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், தவெக தலைவர் விஜய்யின் பாதுகாப்பு கருதி அவருக்கு Y பிரிவு பாதுகாப்பு வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. ஆனால், எப்போது முதல் Y பிரிவு பாதுகாப்பு வழங்கப்படும் என்பது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
இந்நிலையில், மார்ச் 14-ம் தேதி, அதாவது நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை முதல் விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற அரசியல் கட்சி தொடங்கிய விஜய், தேர்தல் பிரச்சார பணிகளுக்காக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் நிலையில், சமூக வலைதளங்கள் மூலமாக அச்சுறுத்தல் எழுந்த நிலையில் அவரது பாதுகாப்பிற்காக மத்திய அரசு Y பிரிவு பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டது.
இதற்கு முன்னதாக விஜய்க்கு வெளிநாட்டு பவுன்சர்கள் பாதுகாப்பு வழங்கி வந்தனர். இனிமேல் மத்திய ரிசர்வ் படையைச் சேர்ந்த கமாண்டோக்களின் பாதுகாப்பும் இருக்கும். விஜய்யின் Y பிரிவில் சிஆர்பிஎஃப் பாதுகாப்பு அதிகாரிகள், ஆயுதம் ஏந்திய காவலர்கள் என 8 முதல் 11 காவலர்கள் விஜய்க்கு பாதுகாப்பு அளிப்பார்கள்.
அவருக்கு 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பாதுகாப்பு வழங்கப்படும். இந்த பாதுகாப்பு, தமிழகத்தில் இருக்கும் போது மட்டுமே வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இச்சூழலில்தான், அரசியல் முழக்கமிடும் ‘ஜனநாயகன்’ படம் திரைக்கு வருகிறது. அனிருத் இசையமைப்பில் இப்படத்தில் இடம்பெறும் பாடல்கள் கொள்கை ரீதியாகவே ஒலிக்கும் என கூறப்படுகிறது.