‘ஆர்யன்’ படம் தொடர்பாக, விஷ்ணு விஷால் விடுத்துள்ள வேண்டுகோள்..
பிரவீன் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நாயகனாக நடித்து தயாரித்துள்ள படம் ‘ஆர்யன்’. இன்று வெளியாகியுள்ள இப்படத்துக்காக நெகிழ்ச்சியுடன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் விஷ்ணு விஷால். அதில் 3 ஆண்டுகளுக்குப் பிறகு தனி நாயகனாக நடித்து ’ஆர்யன்’ படம் வெளியாகியுள்ளதை நினைவு கூர்ந்துள்ளார். மேலும், படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து அறிக்கையின் முடிவில், ‘சில படங்கள் பார்க்கும்போது மூளையை வீட்டிலேயே விட்டுவிடுங்கள் என்று மக்கள் அடிக்கடி சொல்வார்கள். ’ஆர்யன்’ படத்தைப் பொறுத்தவரை உங்கள் சிந்தனையை விட்டுவிட்டு படத்தை அனுபவியுங்கள். ஆம், ஒரு சிறிய வேண்டுகோள் – ‘ஆர்யன்’ பார்க்கும் முன்பு ‘ராட்சசன்’ படத்தைப் பார்க்காதீர்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்த அறிக்கையின் வார்த்தைகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
செல்வராகவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், கருணாகரன் உள்ளிட்ட பலர் விஷ்ணு விஷால் உடன் நடித்துள்ள படம் ‘ஆர்யன்’. இசையமைப்பாளராக ஜிப்ரான் பணிபுரிந்துள்ளார். ‘ஆர்யன்’ படத்தின் பணிகளை முடித்துவிட்டு, தற்போது ‘கட்டா குஸ்தி 2’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் விஷ்ணு விஷால்.

