எனது அம்மா அழுததைப்போல், எனது மனைவியும் குழந்தைகளும் அழக்கூடாது: இயக்குநர் பா.ரஞ்சித் உருக்கம்..
இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள’ பாட்டில் ராதா’ என்ற படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது.
தினகரன் இயக்கத்தில், குரு சோமசுந்தரம், சஞ்சனா நடராஜன், மாறன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பாட்டில் ராதா’. இந்தப் படம் வரும் 24-ம் தேதி ரிலீஸாகவுள்ளது. ஷான் ரோல்டன் இசை அமைத்துள்ளார்.
படம், போதைக்கு அடிமையானவர், அதில் இருந்து எப்படி மீண்டு வருகின்றார் என்பதை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. படத்தின் டிரைலர் நேற்று ஜனவரி 18-ம் தேதி ரிலீஸ் செய்யப்பட்டு, ரசிகர்கள் மத்தியில் கவனத்தினை ஈர்த்துள்ளது.
இந்நிலையில், படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் இயக்குநர் பா.ரஞ்சித், பேசும்போது, ‘இந்தப் படத்தில் வரும் அஞ்சலைதான் எனது அம்மா. எனது அப்பா, என்னையும் எனது சகோதரர்களையும் உணவுக்காகவோ, பணத்திற்காகவோ யாரிடமும் கொண்டு போய் நிறுத்தியது கிடையாது. நாங்கள் உடுத்தும் உடை, எங்களது கல்வியில் மிகவும் கவனமாகவே இருந்தார்.
இவ்வளவு செய்த எனது அப்பா, குடி என வரும்போது, தன்னையே இழந்து விடுவார். ஒரு திருவிழா வந்தால், ஊரே மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். எனது அம்மா மட்டும் அழுதுகொண்டே இருப்பார். எங்க அம்மா அழுவதை என்னால் பார்க்கவே முடியாது. அப்போது நான் 12-ம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்தேன்.
ஒரு நாள் இரவு, எனது அம்மா அழுவதை பார்க்க முடியாமல் தவித்து வந்த நான், தற்கொலை செய்துகொள்ளலாமா என எல்லாம் யோசித்து இருக்கின்றேன். எனது அப்பாவை அதில் இருந்து மீட்டுக் கொண்டு வர, எனது அம்மா, அண்ணன் மற்றும் தம்பிதான் மிகவும் கஷ்டப்பட்டார்கள். நான் வீட்டிலேயே இருக்க மாட்டேன்.
ஆனால், எனது அப்பாவிற்கு இன்னும் கொஞ்ச நாள் வாழவேண்டும் என்ற ஆசை இருந்தது. ‘எனக்கு இன்னும் கொஞ்ச நாள் வாழனும் போல இருக்குடா’ என என்னிடம் கூறினார்.
மருத்துவர்கள் எனது அப்பா இன்னும் 6 மாதங்கள் வரை இருப்பார் எனக் கூறியிருந்தார்கள். ஆனால், அவர் ஒரு வாரத்திலேயே இறந்துவிட்டார். எனது அம்மா அழுதுகொண்டு இருந்ததைப்போல், எனது மனைவியும் எனது குழந்தைகளும் அழக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கின்றேன்’ என கலங்கிய கண்ணீருடன் பேசினார்.
