வணங்கான் திரைப்படத்தில் இயக்குனர் மிஷ்கின் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மிஷ்கின். இவர் தற்போது ஆண்ட்ரியா நடிப்பில் உருவாகி வரும் பிசாசு 2 திரைப்படத்தை இயக்கி வருகிறார். அத்துடன் நடிகராகவும் பல படங்களில் நடித்து வரும் இயக்குனர் மிஷ்கின் சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மாவீரன் திரைப்படத்திலும் வில்லனாக நடித்து அசத்தியிருந்தார்.

தற்போது லோகேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள விஜயின் லியோ திரைப்படத்திலும் நடித்திருக்கும் இயக்குனர் மிஷ்கின் அடுத்ததாக இயக்குனர் பாலா இயக்கத்தில் அருண் விஜய் கதாநாயகனாக நடித்து வரும் “வணங்கான்” திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் துவங்கப்பட்ட இப்படத்தில் நடிகர் சூர்யா கதாநாயகனாக நடித்து வந்த நிலையில் திடீரென்று அவர் விலகுவதாக அறிக்கை வெளியிட்டிருந்ததால் இப்படத்தில் தற்போது நடிகர் அருண் விஜய் கதாநாயகனாக நடித்து வருகிறார். ஜிவி பிரகாஷ் இசையமைப்பில் இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இயக்குனர் பாலாவின் நெருங்கிய நண்பரான இயக்குனர் மிஷ்கின் இப்படத்தில் இணைந்து இருப்பது படம் மீது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இயக்குனர் மிஷ்கினின் பிசாசு திரைப்படத்தின் முதல் பாகத்தை இயக்குனர் பாலாவின் பி ஸ்டூடியோ நிறுவனம் தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.