நகைச்சுவை நடிகர் சந்திரபாபு வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க தனுஷ் ஆர்வம்..
மறைந்த நகைச்சுவை நடிகர் சந்திரபாபு பயோபிக் படத்தில் நடிக்க தனுஷ் மிகவும் ஆர்வமாய் இருக்கிறார். இது பற்றிய விவரம் வருமாறு:
‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’, ‘இட்லி கடை’, ‘குபேரா’, ராஜ்குமார் பெரியசாமி இயக்கவுள்ள படம், விக்னேஷ் ராஜா இயக்கவுள்ள படம் என பல படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் தனுஷ்.
இதில் ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ மற்றும் ‘இட்லி கடை’ ஆகிய படங்களை அவரே இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, மறைந்த நடிகர் சந்திரபாபுவின் வாழ்க்கை வரலாற்று கதையில் நடிக்க தனுஷ் ஆர்வம் காட்டி வருகிறார். இப்படத்தினை குளோபல் ஒன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. சந்திரபாபு பயோபிக்கில் நடிக்க தனுஷிடம் பேச்சுவார்த்தையும் நடைபெற்று இருக்கிறது.
தென்னிந்திய சினிமா வரலாற்றில் தனித்த முத்திரை பதித்த நகைச்சுவை நடிகர் ஜேபி சந்திரபாபு. அவரது வாழ்க்கை வரலாற்றை படமாக்கும் உரிமையை அவரது சகோதரர் ஜவஹரிடமிருந்து வாங்கப்பட்டுள்ளது. அதேபோல், இயக்குநர் கே. ராஜேஷ்வர் எழுதிய ‘ஜேபி: தி லெஜண்ட் ஆஃப் சந்திரபாபு’ நாவலின் உரிமையையும் வாங்கியுள்ளது.
எழுத்தாளர் ஜெயமோகன் படத்தின் திரைக்கதை மற்றும் வசனங்களுக்குப் பொறுப்பேற்றுள்ளார்.மேலும், பாடலாசிரியர் மதன் கார்க்கி கூடுதல் திரைக்கதை, வசனம் மற்றும் பாடல்களுக்கு பங்களிக்கவுள்ளார். குறிப்பாக, இப்படத்தை இயக்குபவர் நல்ல சிற்பியாக இருத்தல் முக்கியம்’ என கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது.
ஆம், நகைச்சுவை உணர்வும் சீரிய சிந்தனையும் மிக்கவர் சந்திரபாபு. அவரது வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவங்கள் ஆச்சரியமாகவும் அதே நேரம் நெகிழ்ச்சியாகவும் உள்ளது. அதனை இன்றைய தலைமுறையினர் அறிந்து கொள்வதும் ஒரு படிப்பினைதான். பொறுத்திருந்து பார்ப்போம்.!