Delhi Capitals :
Delhi Capitals :

Delhi Capitals : 8 அணிகள் இடையிலான 12-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

இதில் டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நேற்றிரவு நடந்த 16-வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்சை எதிர்கொண்டது.

டெல்லி அணியில் மூன்று மாற்றமாக அவேஷ்கான், ஹனுமா விஹாரி, ஹர்ஷல் பட்டேல் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக இஷாந்த் ஷர்மா, அக்‌ஷர் பட்டேல், ராகுல் திவேதியா சேர்க்கப்பட்டனர்.

ஐதராபாத் அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. கேப்டன் வில்லியம்சன் காயத்தில் இருந்து இன்னும் மீளாததால் புவனேஷ்வர்குமார் அந்த அணியை வழிநடத்தினார்.

‘டாஸ்’ ஜெயித்த ஐதராபாத் பொறுப்பு கேப்டன் புவனேஷ்வர்குமார், எதிரணியை பேட் செய்ய பணித்தார். இதன்படி முதலில் பேட்டிங் செய்த டெல்லி முதல் பந்தை பவுண்டரி அடித்து ரன் கணக்கை தொடங்கியது.

ஆனால் ஐதராபாத் அணியின் துல்லியமான பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் திணறியது. தொடக்க ஆட்டக்காரர் பிரித்வி ஷாவுக்கு (11 ரன்), புவனேஷ்வர்குமார் வீசிய பந்தில் ஆப்-ஸ்டம்பு பல்டி அடித்தது.

மற்றொரு தொடக்க வீரர் ஷிகர் தவான் (12 ரன்) சுழற்பந்து வீச்சாளர் முகமது நபியின் பந்து வீச்சில் கேட்ச் ஆனார்.

இதன் பின்னர் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் ஒரு பக்கம் நிலைகொண்டு விளையாட, மறுமுனையில் அந்த அணியின் விக்கெட்டுகள் வேகமாக சரிந்தன.

சொல்லி வைத்தார் போல் விக்கெட் கீப்பர் ரிஷாப் பான்ட், திவேதியா, காலின் இங்ராம் மூன்று பேரும் தலா 5 ரன்னில் கேட்ச் ஆனார்கள்.

முகமது நபியை தவிர, ரஷித்கானும் சுழலில் டெல்லியை வெகுவாக கட்டுப்படுத்தினர்.

ஓரளவு போராடிய ஸ்ரேயாஸ் அய்யரும் 43 ரன்னில் (41 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்) பெவிலியன் திரும்பினார்.

மந்தமாக நகர்ந்த இந்த ஆட்டத்தில் அந்த அணிக்கு சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் கடைசி ஓவரில் அக்‌ஷர் பட்டேல் 2 சிக்சர் பறக்க விட்டார்.

20 ஓவர்களில் டெல்லி அணி 8 விக்கெட் இழப்புக்கு 129 ரன்களுக்கு கட்டுப்படுத்தப்பட்டது.

இந்த சீசனில் டெல்லி அணியின் மோசமான ஸ்கோர் இதுவாகும். அக்‌ஷர் பட்டேல் 23 ரன்களுடன் (13 பந்து, ஒரு பவுண்டரி, 2 சிக்சர்) களத்தில் இருந்தார்.

ஐதராபாத் தரப்பில் முகமது நபி, சித்தார்த் கவுல், புவனேஷ்வர்குமார் தலா 2 விக்கெட்டும், ரஷித்கான், சந்தீப் ஷர்மா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

அடுத்து எளிய இலக்கை நோக்கி ஆடிய ஐதராபாத் அணிக்கு டேவிட் வார்னரும், பேர்ஸ்டோவும் வலுவான தொடக்கம் உருவாக்கித் தந்தனர்.

குறிப்பாக பேர்ஸ்டோ அடிக்கடி பந்தை எல்லைக்கோட்டுக்கு ஓடவிட்டு, உற்சாகப்படுத்தினார்.

அணியின் ஸ்கோர் 64 ரன்களாக (6.5 ஓவர்) உயர்ந்த போது பேர்ஸ்டோ (48 ரன், 28 பந்து, 9 பவுண்டரி, ஒரு சிக்சர்) எல்.பி.டபிள்யூ. ஆனார். அடுத்த ஓவரில் வார்னரும் வெளியேற்றப்பட்டார்.

முந்தைய ஆட்டங்களில் அரைசதங்களும், சதமும் நொறுக்கி இருந்த வார்னர் இந்த ஆட்டத்தில் 10 ரன்னில் (18 பந்து) கேட்ச் ஆகிப்போனார்.

சிறிய இடைவெளியில் மனிஷ் பாண்டே (10 ரன்), விஜய் சங்கர் (16 ரன்), தீபக் ஹூடா (10 ரன்) ஆகியோர் நடையை கட்டினர்.

இதனால் ஐதராபாத் அணி லேசான நெருக்கடிக்குள்ளானது. இருப்பினும் முகமது நபியும் (17 ரன்), யூசுப்பதானும் (9 ரன்) இணைந்து வெற்றியை உறுதி செய்தனர்.

அந்த அணி 18.3 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் சேர்த்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐதராபாத் அணிக்கு இது 3-வது வெற்றியாகும். டெல்லி சந்தித்த 3-வது தோல்வி இதுவாகும்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.