DC vs SRH :
DC vs SRH :

DC vs SRH :

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரில் விசாகப்பட்டினத்தில் இன்று இரவு நடைபெறும் தகுதி சுற்று ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ்-ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிகள் மோதுகின்றன.

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி லீக் சுற்றில் 9 வெற்றி, 5 தோல்வியுடன் 18 புள்ளிகளுடன் 3-வது இடத்தை பிடித்து ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெற்றது.

ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்கை பயிற்சியாளராகவும், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலியை ஆலோசகராகவும் கொண்டுள்ள டெல்லி அணி பெயர் மாற்றம் செய்ததுடன்,

இந்த சீசனில் ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில் எழுச்சி பெற்றுள்ளது. அத்துடன் 2012-ம் ஆண்டுக்கு பிறகு அந்த அணி முதல்முறையாக ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி கண்டு இருக்கிறது.

டெல்லி அணியில் ஷிகர் தவான் (486 ரன்கள்), கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் (442 ரன்கள்), ரிஷாப் பான்ட் (401 ரன்கள்), பிரித்வி ஷா உள்ளிட்டோர் பேட்டிங்கில் நல்ல பார்மில் உள்ளனர்.

25 விக்கெட்டுகள் வீழ்த்திய ரபடா (தென்ஆப்பிரிக்கா) உலக கோப்பை போட்டிக்கான தங்கள் நாட்டு அணிக்கு விளையாடுவதற்கு ஆயத்தமாக நாடு திரும்பி விட்டாலும்,

இஷாந்த் ஷர்மா, அமித் மிஸ்ரா, அக்‌ஷர் பட்டேல் உள்ளிட்ட சிறந்த பவுலர்கள் அணியில் இருக்கிறார்கள்.

2016-ம் ஆண்டு சாம்பியனான ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணி லீக் சுற்றில் 6 வெற்றி, 8 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்றது.

4-வது இடத்துக்கான போட்டியில் ஐதராபாத், கொல்கத்தா, பஞ்சாப் அணிகள் ஒரே புள்ளியுடன் சமநிலை வகித்த போதிலும் ‘ரன்-ரேட்’ அடிப்படையில் ஐதராபாத் அணி 4-வது இடம் பிடித்து ‘பிளே-ஆப்’ சுற்றுக்குள் நுழைந்தது.

ஐதராபாத் அணியின் பேட்டிங்கில் வலுவாக விளங்கிய டேவிட் வார்னர் (ஆஸ்திரேலியா), பேர்ஸ்டோ (இங்கிலாந்து) ஆகியோர்,

உலக கோப்பை போட்டிக்கான தங்கள் நாட்டு அணிக்கு தயாராக சொந்த நாட்டுக்கு திரும்பி விட்டதால் அந்த அணியின் பேட்டிங் பலவீனம் அடைந்துள்ளது.

மனிஷ் பாண்டே (314 ரன்கள்) பேட்டிங்கில் நன்றாக செயல்பட்டு வருகிறார்.

கேப்டன் கேன் வில்லியம்சன், மார்ட்டின் கப்தில், விஜய் சங்கர் ஆகியோர் தங்களது பேட்டிங்கில் முன்னேற்றம் காண வேண்டியது அவசியமானதாகும். பந்து வீச்சில் கலீல் அகமது, ரஷித் கான், புவனேஷ்வர்குமார் ஆகியோர் நல்ல ரிதத்தில் உள்ளனர்.

ஐ.பி.எல். போட்டி வரலாற்றில் ஐதராபாத், டெல்லி அணிகள் இதுவரை 14 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் ஐதராபாத் அணி 9 முறையும், டெல்லி அணி 5 தடவையும் வெற்றி பெற்று இருக்கின்றன.

நடப்பு சீசனில் இரு அணிகளும் லீக் ஆட்டத்தில் 2 முறை சந்தித்தன. இதில் முதலாவது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் அணியும்,

2-வது ஆட்டத்தில் டெல்லி அணியும் வெற்றி பெற்றன. டெல்லி அணியின் அதிரடி ஆட்டத்துக்கு முன்பு ஐதராபாத் அணி தாக்குப்பிடிக்குமா? என்பது சற்று சந்தேகம் தான்.

இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற முடியாது. 10-ந் தேதி நடைபெறும் 2-வது தகுதி சுற்று ஆட்டத்தில், முதல் தகுதி சுற்றில் தோல்வி அடைந்த சென்னை அணியுடன் மோதும்.

இந்த மோதலில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும். இன்றைய ஆட்டத்தில் தோல்வி அடையும் அணி போட்டியை விட்டு வெளியேறும்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.