சென்னை விமான நிலையத்தில் வைத்து நக்கீரன் ஆசிரியர் கோபால் நேற்று கைது செய்யப்பட்டார் . பேராசிரியை நிர்மலா தேவியை குறித்த கட்டுரை காரணமாக, ஆளுநர் மாளிகையில் கொடுத்த புகாரின் பேரில் அவரை கைது செய்தனர்.

இதற்கு எதிராக நக்கீரன் கோபால் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார், ஒன்றரை மணி நேரம் இந்த விசாரணை நடைபெற்றது.  நக்கீரன் கோபால் சார்பாக அவரது வக்கீல் பி.டி பெருமாள் வாதிட்டார். நீதிமன்றத்தில் நக்கீரன் கோபாலின் தரப்பு பல முக்கியமான வாதங்களை முன்வைத்து பேசினர். 124 பிரிவின்கீழ் நக்கீரன் கோபால் மீது வழக்கு பதிவு செய்ய முகாந்திரமில்லை,  ஆளுநரை மிரட்டும் வகையில் நக்கீரனின் கட்டுரை இல்லை. மேலும், ஜனாதிபதி , ஆளுநரின் பணிகளை தடுத்தால் தான் 124 போட முடியும்.

நக்கீரன் கோபாலை கைது செய்ய ஆளுநரின் ஒப்புதல் இருக்கிறதா? கட்டுரை வந்து இவ்வளவு நாள் கழித்து நடவடிக்கை எடுக்க காரணம் என்ன?  ஆளுநரின் ஒப்புதல் பெற்றுதான் அவரது செயலாளர் வழக்கு தொடுத்தாரா ? போன்ற கேள்விகள் நக்கீரன் கோபால் தரப்பில் வாதிடப்பட்டது.

அதற்கு போலீஸ் தரப்பில் வாதிட்ட அரசு வழக்கறிஞர் அதுகுறித்து தங்களுக்கு தெரியாது என கூறினார். பிறகு, அனைத்து வாதங்களையும் கேட்ட நீதிபதி கோபிநாத் , ” நக்கீரன் கோபாலை சிறைக்கு அனுப்ப முடியாது, நக்கீரன் கோபால் மீது சுமத்தப்பட்ட 124 வது பிரிவின் கீழான வழக்கை ஏற்க முடியாது என அதிரடியான தீர்ப்பை வழங்கி,  நக்கீரன் கோபால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்” .