கேப்டன் மில்லர் திரைப்படத்தின் முதல் பாடல் குறித்த சுவாரஸ்யமான அப்டேட்டை ஜிவி பிரகாஷ் குமார் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். அவரது நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள கேப்டன் மில்லர் திரைப்படம் வரும் டிசம்பர் 15ம் தேதி அன்று தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது. இதில் தனுஷ் உடன் இணைந்து பிரியங்கா மோகன், சிவராஜ்குமார், சந்தீப் கிஷன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியமான வேடங்களில் நடித்திருக்கின்றனர்.

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ஜிவி பிரகாஷ் இசையமைப்பில் உருவாகி வரும் இப்படத்தின் டீசர் தனுஷ் பிறந்த நாளை முன்னிட்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் இப்படத்தில் முதல் பாடல் தொடர்பான சுவாரசியமான அப்டேட்டை பகிர்ந்திருக்கும் ஜிவி பிரகாஷின் சமீபத்திய பேட்டியின் தகவல் வைரலாகி வருகிறது.

அதன்படி அப்பேட்டியில் அவர், “கேப்டன் மில்லர் படத்தில் உள்ள அனைத்து பாடல்களும் நன்றாக வந்துள்ளது. இப்படத்தின் பின்னணி இசை ஹாலிவுட் படங்களின் தரத்தில் இருக்கும். கேப்டன் மில்லர் படத்தின் முதல் பாடலுக்கு இரண்டு பெரிய ஹீரோக்கள் நடனம் ஆடி இருப்பதால் அது இன்னும் படத்திற்கு கூடுதலான சிறப்பை ஏற்படுத்தி இருப்பதாக தெரிவித்திருக்கிறார்”. இவரது இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வைரலாகி வருகிறது.