ஏ.ஆர்.ரகுமான் மீது வழக்கு: கோர்ட் அதிரடி உத்தரவு..
மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ 2-ம் பாகம் படத்தில் இடம்பெற்ற ‘வீர ராஜா வீரா’ பாடல் விவகாரத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு எதிராக இந்திய பாரம்பரிய பாடகர் பயஸ் வாசிஃபுதீன் தாகர் பதிப்புரிமை வழக்கு தொடர்ந்தார்.
அதை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், ஏ.ஆர். ரகுமானை கடந்த செப்டம்பரில் விடுவித்தது. இதை எதிர்த்து பாடகர் பயஸ் வாசிஃபுதீன் தாகர் மேல்முறையீடு செய்தார். அந்த மனுவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு மீண்டும் விசாரித்தது.
ஏ.ஆர்.ரகுமான் சார்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி ஆஜராகி, ‘வீர ராஜா வீரா’ பாடலுக்கு திரையில் பாடகர்கள் பயஸ் வாசிஃபுதீன் தாகர், நசீர் ஜாஹீருதீன் சாகர் பெயர்களை குறிப்பிட்டு அனைத்து சமூக வலைத்தளங்கள், ஓடிடி தளங்களில் அங்கீகரிக்கப்படும் என உறுதியளித்தார். அதைப் பதிவு செய்து கொண்ட உச்ச நீதிமன்றம், அதற்காக 5 வாரகால அவகாசம் வழங்கியது.
இந்த விவகாரத்தில் ஏ.ஆர்.ரகுமானின் 2 கோடி ரூபாய் டெபாசிட், டெல்லி உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளார் வசம் இருக்கவும், நீதிமன்றங்கள் தெரிவித்த கருத்துகளை கணக்கில் கொள்ளாமல் சிவில் வழக்கை சுதந்திரமாக விசாரிக்கவும் உத்தரவிட்டு மேல்முறையீடு மனுவை முடித்து வைத்தது.
