மாவீரன் திரைப்படத்தில் பாடிய அனுபவத்தை மகிழ்ச்சியுடன் வெளிப்படுத்தி இருக்கிறார் அதிதி சங்கர்.
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் பிரபல நடிகையாக திகழ்பவர் அதிதி சங்கர். இயக்குனர் சங்கரின் மகளான இவர் கார்த்தியின் ‘விருமன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார். முதல் படத்திலேயே யுவன் சங்கர் ராஜா இசையில் ‘மதுரவீரன்’ என்னும் சூப்பர் ஹிட் பாடல் பாடி அனைவரையும் கவர்ந்திருந்த அதிதி இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘மாவீரன்’ திரைப்படத்திலும் நடித்திருக்கிறார்.
இப்படம் வரும் ஜூலை 14ஆம் தேதி தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியாக உள்ளது. பரத் ஷங்கர் இசையமைப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தில் ஏற்கனவே ஒரு பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலான நிலையில் யுகபாரதி எழுதிய ‘வண்ணாரப்பேட்டையில’ என்ற பாடல் நேற்றைய தினம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இதில் நடிகை அதிதி சங்கர், சிவகார்த்தியேனுடன் இணைந்து பாடி இருக்கிறார். இது குறித்து அதிதி சங்கர் பகிர்ந்திருக்கும் சமீபத்திய பேட்டியின் தகவல் தற்போது வைரலாகி வருகிறது.
அதில் அவர், இது எனது இரண்டாவது பாடல். ‘மதுரை வீரன்’ கிராமத்து டச் உள்ள பாடல். அதில் என் குரலே வித்தியாசமாக இருந்தது. ‘வண்ணாரப்பேட்டை’ இனிமையான ரொமன்டிக் பாடல். சிவகார்த்திகேயன் சாருடன் இணைந்து பாடியது எனக்கு சிறந்த அனுபவத்தைக் கொடுத்தது. இந்தப் பாடல் வாய்ப்பைக் நான் தான் கேட்டேன். அதனை கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்தது இசை அமைப்பாளரும் இயக்குநரும் தான். சிறு வயதில் இருந்தே இசைக் கற்று வருகிறேன். எனக்கு அதில் அதிக ஆர்வம் இருப்பதால், எந்த படம் நடித்தாலும் வாய்ப்பு இருந்தால், தயவு செய்து கொடுங்கள் என்று கேட்டுவிடுவேன். இதிலும் அப்படித்தான் வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து நான் நடிக்கும் படங்களில் பாடுவேனா என்பது எனக்கு தெரியாது. ஆனால், வாய்ப்புக் கிடைத்தால் கண்டிப்பாக பாடுவேன். என்று கூறியிருக்கிறார்.