பழம்பெரும் நடிகை கமலா காமேஷ் நலமாக உள்ளார்; மகள் உமா விளக்கம்..
கமலா காமேஷ் காலமானதாக வலைத்தளங்களில் வந்த தகவல் உண்மையில்லை என அவரது மகள் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் 1980-களில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் கமலா காமேஷ் .1974-ம் ஆண்டு இசையமைப்பாளர் காமேஷை திருமணம் செய்து கொண்டார். அவர் 1984-ம் ஆண்டு காலமானார். இந்த தம்பதிக்கு உமா ரியாஸ் என்ற மகள் உள்ளார்.
கடலோரக் கவிதைகள், அலைகள் ஓய்வதில்லை உள்ளிட்ட 480 படங்களில் நடித்துள்ள கமலா காமேஷ், இயக்குநர் விசுவின் ‘சம்சாரம் அது மின்சாரம்’ படத்தில் கோதாவரி எனும் கதாபாத்திரத்தில் நடித்ததில் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.
தொடர்ந்து திரைப்படங்கள் மட்டுமின்றி மேடைநாடகங்கள் , சின்னத்திரையிலும் நடித்துள்ளார். தற்பொழுது கமலா காமேஷுக்கு வயது வயது 72. இந்நிலையில், இவர் உடல்நலக்குறைவு காரணமாகக் காலமானதாகத் தகவல் வெளியானது. இதற்கு மகள் உமா ரியாஸ் மறுப்பு தெரிவித்து விளக்கம் அளித்துள்ளார்.
‘எனது தாயார் கமலா காமேஷ் இறந்ததாக சமூக வலைத்தளத்தில் செய்திகள் பரவி வருகிறது. ஆனால் அந்த தகவல் உண்மையில்லை.
ஆனால் அதே நேரம், எனது கணவர் ரியாஸ் கானின் அம்மா, அதாவது என்னுடைய மாமியார் ரசீதா பானு தான் சில வருடங்களாக உடல் நலப் பிரச்சினைகளால் அவதிப்பட்டு வந்த நிலையில், அவர் 72-வது வயதில் இறந்தார். தன்னுடைய அம்மா கமலா காமேஷ் தற்போது நலமாக உள்ளார்’ என தெரிவித்துள்ளார்.