வெற்றிமாறன், அஷ்வத் மாரிமுத்துவை தொடர்ந்து, அறிமுக இயக்குநரின் கதையில் சிம்பு..

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘அரசன்’ படத்தின் ஆரம்பகட்டப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதனிடையே, புதிய படமொன்றில் நடிக்க சிம்புவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
இதனை அறிமுக இயக்குநர் தீபக் ரெட்டி இயக்கவுள்ளார். அவர் இதற்கு முன்பாக குறும்படம் ஒன்றை மட்டுமே இயக்கி இருக்கிறார். இப்படத்தினை சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இப்படம் குறித்த இறுதிக்கட்டப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இதில் சுமூகமான முடிவு எட்டப்படும் பட்சத்தில், இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும். தற்போது வெற்றிமாறன் மற்றும் அஸ்வத் மாரிமுத்து இயக்கவுள்ள படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் சிம்பு. ’அரசன்’ படத்தின் படப்பிடிப்பு தீபாவளி முடிந்ததும் தொடங்கவுள்ளது.
இந்நிலையில், சிம்பு நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாக உள்ளதாக கூறப்படும் 50-வது படம் என்ன என்பது தற்போதைய கேள்வியாக இருக்கிறது. முதலில் இப்படத்தினை தேசிங்கு பெரியசாமி இயக்குவதாக இருந்தது. மணிகண்டன் நடிக்கும் படத்தினை இயக்கி முடித்துவிட்டு, சிம்பு நடிக்கும் படத்தினை தேசிங்கு பெரியசாமி இயக்குவார் என கூறப்பட்டு வருகிறது.
