நான் கேவலமா இருக்கேன்னு விமர்சனம் பண்ணாங்க: நடிகர் பிரதீப் கான்ஃபிடென்ட்
முள்ளு முள்ளாய் தெரியும் பலாப்பழம். ஆனால், அதனுள்ளே இருப்பதென்ன இனிக்கும் சுளையல்லவா. அதுபோல, மனிதர்களைக் கணிப்போம். இப்ப, விஷயத்திற்கு வருவோம்..
தமிழ் சினிமாவில் ‘கோமாளி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார் பிரதீப் ரங்கனாதன். இதனை தொடர்ந்து ‘லவ் டுடே’ படத்தை இயக்கியதுடன் ஹீரோவாகவும் வெற்றி பெற்றார்.
தற்போது ‘டிராகன்’ படம் ரிலீஸாகி மாஸான வரவேற்பை பெற்று வருகிறது. இந்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. முன்னதாக, ‘லவ் டுடே’ படத்தையும் தயாரித்திருந்தது.
இந்நிலையில், ‘லவ் டுடே’ பட புரமோஷன்போது, தான் சந்தித்த அவலத்தை தற்போது பேசியுள்ளார். ‘லவ் டுடே பிரமோஷனுக்காக மேடையேறிய என்னிடம், எப்படி இருக்கீங்க? என்று கேள்வி எழுப்பப்பட்டது. நன்றாக இருக்கிறேன் என்று பதிலளித்தபோது, பார்வையாளர்கள் பக்கத்தில் இருந்து, கேவலமாக இருப்பதாக பதில் வந்தது.
ஆனால், அந்த சம்பவம் எனக்கு அதிகமான வருத்தத்தை கொடுக்கவில்லை. சிறுவயதில் இருந்தே இதுபோன்ற விமர்சனங்களை நான் சந்தித்திருக்கிறேன். இப்போது, என்மீது எனக்கு அதிகமான நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. சில காலங்கள் என்னுடைய தோற்றத்தை பார்த்த ரசிகர்கள், தற்போது என்னை விரும்பத் துவங்கியுள்ளனர்.
ஒரு நபரிடம் பேசுவதற்கு முன்னதாக, அவரின் தோற்றத்தை வைத்தே அவரை மற்றவர்கள் கணிக்கின்றனர். தொடர்ந்து அவரிடம் பேசிப் பழகும்போதுதான் அவரின் உண்மையான நல்ல விஷயங்கள் வெளிப்படும்’ என பேசியுள்ளார். ஆம், உருவம் மாறும்; உள்ளம்தானே நிரந்தரம்.!