முதலமைச்சர் விஜய்யை சந்தித்த அதர்வா, கவின்… நெகிழ்ச்சியுடன் பகிர்ந்த பதிவு!

Web Ads

தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்யை நடிகர்கள் அதர்வா முரளி மற்றும் கவின் சென்னை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். சமீப காலமாக தமிழ் திரையுலகைச் சேர்ந்த பல்வேறு பிரபலங்கள் முதலமைச்சரைச் சந்தித்து வரும் நிலையில், இந்தச் சந்திப்பும் கவனம் பெற்றுள்ளது.

நடிகர் அதர்வா முரளி நடித்துள்ள ‘இதயம் முரளி’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில், அதன் வெளியீட்டுக்கு முன்பாக முதலமைச்சர் விஜய்யை சந்தித்து அவரது வாழ்த்துகளையும் ஆசியையும் பெற்றார்.

இதுகுறித்து தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ள அதர்வா, “மாண்புமிகு தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களைச் சந்தித்தது மிகுந்த மகிழ்ச்சியும் பெருமையும் அளிக்கிறது. அவர் எப்போதும் எங்களின் ‘விஜய் அண்ணா’தான். என் வாழ்க்கையின் முக்கியமான தருணத்திற்கு முன்பாக அவரிடமிருந்து அன்பும் ஆசியும் பெற்றது உலகையே வென்ற உணர்வை அளிக்கிறது. இந்தச் சந்திப்பு என்னை மிகவும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது. நன்றி அண்ணா!” என்று தெரிவித்துள்ளார்.

அதர்வாவைத் தொடர்ந்து நடிகர் கவின்வும் முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து உரையாடினார். தனது வாழ்வின் மறக்க முடியாத தருணமாக இந்தச் சந்திப்பை குறிப்பிட்டுள்ள அவர், தனது எக்ஸ் பதிவில், “சில மனிதர்கள் தங்களின் எளிமை, பணிவு, கனிவு ஆகியவற்றால் எப்போதும் ஊக்கமளிப்பார்கள். காலம் அவரது பயணத்தை மாற்றியிருக்கலாம்; ஆனால் அவரது மனிதநேயம் மாறவில்லை. ரசிகனாக பெரிய திரையில் பார்த்து வளர்ந்த ஒருவரை இன்று தமிழக முதலமைச்சராக மக்களுக்காக பணியாற்றுவதைக் காண்பது எனக்கு மிகப்பெரிய உத்வேகமாக உள்ளது. என் வாழ்நாள் முழுவதும் நினைவில் நிற்கும் பொக்கிஷமான தருணம் இது” என்று நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

அதர்வா நடித்துள்ள ‘இதயம் முரளி’ படத்தில் அவருக்கு ஜோடியாக கயாடு மற்றும் ப்ரீத்தி முகுந்தன் நடித்துள்ளனர். மேலும், இசையமைப்பாளர் தமன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகராக இப்படத்தின் மூலம் திரைக்கு வருவதும் படத்தின் சிறப்பம்சமாக உள்ளது.

மறுபுறம், நடிகர் கவின், நயன்தாராவுடன் இணைந்து இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கும் ‘ஹாய்’ திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார்.