திரைக்கலையை மறந்தாலும், ஓவியக்கலையை மறவேன்; ஷாலினியின் தங்கை ஷாமிலியின் கண்காட்சி..

ஷாலினியின் தங்கை ஷாமிலி தற்போது என்ன செய்கிறார் என காண்போம்..
எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் விஜயகாந்த் நடித்து வெளியான ‘ராஜநடை’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ஷாலினியின் தங்கை ஷாமிலி. பின்னர், மணிரத்னம் இயக்கத்தில் ‘அஞ்சலி’ படத்தில் நடித்து சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருதை பெற்றார்.
மேலும் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தவர், சித்தார்த்துக்கு ஜோடியாக தெலுங்கில் ‘ஓய்’ என்ற படத்தில் ஹீரோயின் ஆனார். பின்னர், விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான ‘வீரசிவாஜி’ படத்தில் முக்கிய ரோலில் நடித்த ஷாமிலி, கடைசியாக ‘அம்மமகரிலு’ படத்தில் நடித்த பிறகு எந்த படத்திலும் நடிக்கவில்லை.
37 வயதாகியும் திருமண வாழ்வில் ஈடுபாடில்லாத நிலையில் படிப்பு, கலை என ஆர்வம் கொண்டுள்ளார். மலேசியாவில் தற்போது, தான் வரைந்த ஓவியங்களை கண்காட்சிக்காக வெளியிட்டு ரசிகர்களின் லைக்குகளை அள்ளியுள்ளார்.
மேலும், மலேசியாவின் ட்வின் டவர்ஸ் உள்ளிட்ட இடங்களுக்குச் சென்று சுற்றிப்பார்த்த புகைப்படங்களையும் ஷாமிலி தனது இன்ஸ்டாவில் பதிவிட்டு வருகிறார். மேலும், குடும்ப நிகழ்ச்சிகளில் அடிக்கடி கலந்துகொண்டு தனது அக்கா ஷாலினி மற்றும் அக்கா மகள் அனோஷ்காவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.
ஷாமிலிக்கு மாடர்ன் ஆர்ட் வரைவதில் ஆர்வம் அதிகம். தனது பாதையே இதுதான் என முடிவு செய்துள்ள அவர், உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளுக்குச் சென்று ஓவியக் கண்காட்சியை நடத்தி வருகிறார்.
வித விதமான வித்தியாசமான ஓவியங்களை வரைந்து வைத்திருக்கும் ஷாமிலி, ‘கடந்த மே 16-ந்தேதி முதல், வரும் மே 30-ந்தேதி வரை மலேசியாவில் தனது கண்காட்சி இருக்கும்’ என பதிவிட்டு ரசிகர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். திரைக்கலையை விட்டு விலகினாலும், ஓவியக்கலையோடு ஒன்றாக கலந்துவிட்டார் ஷாமிலி.
