ரஜினியின் ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய திரை உலகில் ரசிகர்களால் என்றென்றும் சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்படும் நடிகர் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். அனிருத் இசையமைப்பில் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, சுனில், மோகன்லால், ஜாக்கி ஷெராப், தமன்னா, சிவராஜ்குமார் என ஏராளமான முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருக்கும் இப்படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

இதனால் இப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் புதிய அப்டேட்டாக ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் விஜய் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அந்நிகழ்ச்சியில் ரஜினி லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாக போகும் அடுத்த படத்திற்கான அப்டேட்டும் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இதுவரை வெளிவராமல் இருந்தாலும் இந்த சூப்பரான தகவல் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.