விடுதலை-2 திரைப்படம், ஓடிடி.யில் ரிலீஸ்

வீட்டுக்குள் எழுப்பிய திரையரங்கமான ஓடிடி.யில், விடுதலை-2 படம் ரிலீஸாகிறது. இது பற்றிய விவரம் காண்போம்..
திறன்மிகு இயக்குனர் என பெயரெடுத்தவர் வெற்றிமாறன். இவர் இயக்கிய முதல் படம் ‘பொல்லாதவன்’. இதனைத் தொடர்ந்து ஆடுகளம், வடசென்னை, அசுரன், விடுதலை வரை 7 படங்களும் வெற்றியடைந்தன.
இந்நிலையில், விடுதலை படத்தின் 2-ம் பாகம் உருவாகி வெளியாகி இருக்கிறது. விஜய் சேதுபதி நடித்த பெருமாள் வாத்தியார் என்கிற கேரக்டரை மையமாக வைத்து படமாக்கப்பட்டு உள்ளது. விஜய் சேதுபதி ஜோடியாக மஞ்சு வாரியர் மீண்டும் ‘அசுரன்’ படத்திற்கு பிறகு பணியாற்றி இருக்கிறார்.
படத்தில் கருணாஸின் மகன் கென், 10 நிமிடம் மட்டுமே வரக்கூடிய சின்ன ரோலில் நடித்திருந்தாலும், அவர் வரும் காட்சிகள் மனதில் பதியும்படி இருக்கின்றன. இப்படி படத்தில் பாசிடிவ் பல இருந்தாலும், அதற்கு ஏற்ப நெகடிவ்வும் நிரம்பி உள்ளதால் விடுதலை-2 படம் பாக்ஸ் ஆபிஸில் பெரியளவில் வரவேற்கப்படவில்லை.
அதாவது, விடுதலை 2 திரைப்படம் ரிலீஸ் ஆன 7 நாட்களில் தமிழ்நாட்டில் ரூ.28 கோடியும், உலகளவில் ரூ.35 கோடிக்கு மேலும் வசூலித்துள்ளது. இப்படத்துக்கு போட்டியாக வெளிவந்த முஃபாசா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருவதால், விடுதலை 2 படத்தின் வசூல் நாளுக்கு நாள் சரிவையே சந்தித்துள்ளது.
அதுமட்டுமின்றி இந்த வாரம் நிறைய புதுப்படங்கள் வந்துள்ளதால் விடுதலை 2 படத்திற்கான தியேட்டர்களின் எண்ணிக்கையும் கணிசமாக குறைக்கப்பட்டு உள்ளன. இதனால், இப்படம் தியேட்டரில் இருந்து விரைவில் விடுதலை பெற்று, ஓடிடியில் ரிலீஸ் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதில், முக்கிய தகவல் என்னவென்றால், ஓடிடியில் தியேட்டரை விட 1 மணிநேர கூடுதல் காட்சிகளுடன் விடுதலை 2 ரிலீஸ் ஆகிறது. இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் உரிமையை ஜீ5 நிறுவனம் பெற்றுள்ளது.
