சூர்யா-விஜய் குறித்து இயக்குனர் பாலா பேச்சு; சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி..
அலைகள் ஓய்ந்தாலும் சர்ச்சைகள் ஓய்வதில்லை. அது சரி, பழுத்த மரம்தானே கல்லடி படும். இப்ப, விஷயத்திற்கு வருவோம்..
பாலுமகேந்திரா திரைக்கூடத்திலிருந்து வந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர் இயக்குநர் பாலா. தற்போது, இவர் இயக்கத்தில் அருண்விஜய் நடித்துள்ள ‘வணங்கான்’ படம் ஜனவரி 10-ந்தேதி வெளியாக உள்ளது.
இப்படத்தின் டீசர், டிரைலர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருக்கும் நிலையில், படத்தைப் பற்றியும்; முன்னதாக விஜய் கலந்துகொண்ட நிகழ்ச்சி பற்றியும் பாலா தெளிவுறுத்தியதாவது:
‘வணங்கான்’ படத்தில் பிரச்சினை ஏற்பட்டதால், படத்திலிருந்து சூர்யா விலகி விட்டதாக சொல்லப்படுகிறது. அது, உண்மையில்லை. நானும் சூர்யாவும் பேசினோம். பொது இடத்தில் அவரை வைத்துப் படம் எடுக்க முடியவில்லை. கூட்டம் கூடி விடுகிறது. இதனால், இந்த படம் வேண்டாம். அடுத்த படம் எடுப்போம் என இருவரும் சேர்ந்து, சுமூகமாக எடுத்த முடிவுதான் அது.
எங்கள் இருவருக்கும் உறவு சுமூகமாகத்தான் இருக்கிறது. தனிப்பட்ட முறையில் நான் ஏதாவது தவறு செய்தாலும், அதை கண்டிக்கும் உரிமை சூர்யாவிற்கு இருக்கிறது.
ஒரு திரைப்பட விழாவில், விஜய் அவர்களை பார்த்து நான் எழுந்திருக்கவில்லை என்றும், விஜய்யை பாலாவிற்கு பிடிக்காது, அதனால்தான் பாலா வேண்டும் என்றே அப்படி அமர்ந்து இருந்தார் என்றும் பலவிதமான செய்திகள் பரப்பப்பட்டன.
அது உண்மை இல்லை, அது செய்தியாக்கப்பட்டது, அது என்னை அறியாமல் நடந்த விஷயம். அப்படியே இருந்தாலும், நான் ஏன் அவரைப் பார்த்து எழுந்திருக்க வேண்டும், விஜய் என்னை விட எத்தனையோ வயது சிறியவர்.
அப்படி இருக்கும்போது, நான் ஏன் எழுந்து நிற்க வேண்டும். ஒரு வேளை நான் அன்று எழுந்து நிற்காமல் இருந்தது கவனக்குறைவால் நடந்து இருக்கலாமே தவிர, அவரை அவமானப்படுத்த வேண்டும் என்பதற்காக, கால் மீது கால் போட்டுக் கொண்டு அமர்ந்திருக்கவில்லை.
பிடித்தமான நடிகர்களில் விஜய்யும் ஒருவர், ஒருமுறை நானும் எனது குடும்பத்தினரும் ஒரு நிகழ்ச்சியில் சென்ற போது, விஜய் அங்கு இருந்தார். அப்போது என் மகள் அவருடைய மடியில் ஏறி உட்கார்ந்து கொண்டார். அதை பார்த்த விஜய், என்னிடம் ஒரு செல்பி எடுத்துக் கொள்ளட்டுமா? என அனுமதி கேட்டார். அப்படி ஒரு டிசிப்ளினான ஒருவரை நான் எப்படி அவமானப்படுத்துவேன்.
பல இடத்தில் பலவிதமான கருத்துகள் என்னைப் பற்றி வருகின்றன. அவற்றுக்கெல்லாம் நான் விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.
நான் யார் என்று எனக்குத் தெரியும், அப்படி இருக்கும்போது இணையத்தில் பரவும் செய்திக்காகவும், விமர்சனத்திற்காகவும் நான் பதில் கொடுத்துக் கொண்டே இருந்தால், என் வேலையை நான் சரியாக செய்ய முடியாது’ என உரைத்தார்.
‘கற்றாரை கற்றாரே காமுறுவர்’ என்பது போல, பாலாவின் திரைக்குரல் வரவேற்புக்குரியதே.!