‘தக் லைஃப்’ பட அபிராமிக்கு லக், ஐஸ்வர்யா குட், திரிஷா பேட்: விமர்சனக் கணைகள்

‘தக் லைஃப்’ படத்தில் இசையுலகில் திரிஷா சிறந்த பாடகியாக சாதனை படைப்பது போன்ற காட்சிகள் இருக்கும் என்று கூறப்பட்டது. ஆனால், அந்தக் காட்சிகள் அனைத்தும் நீக்கப்பட்டு விட்டது ஏன்? என திரிஷா ரசிகர்கள் கேள்விக் கணை தொடுத்து வருகின்றனர்.
மணிரத்னம் இயக்கியுள்ள ‘தக் லைஃப்’ படத்தில் ரங்கராய சக்திவேலுவாக கமல்ஹாசன் நடித்துள்ளார். அவரது வளர்ப்பு மகனாக அமரன் என்ற கதாபாத்திரத்தில் சிம்பு நடித்துள்ளார்.
மேலும் நாசர், ஜோஜு ஜார்ஜ், அசோக் செல்வன் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்நிலையில் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட இப்படம் ஏமாற்றத்தையே தந்துள்ளது. அதனால், நெகடிவ் விமர்சனங்கள் தொடர்கின்றன.
குறிப்பாக, இந்திராணி என்கிற திரிஷாவின் கதாபாத்திரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வலைதளங்களில் பலரும் விமர்சித்து வருகின்றனர். இந்திராணி என்ற கதாபாத்திரத்தில் திரிஷா ஏன் நடித்தார் எனவும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். சிலர் அவரைக் கேலி செய்தும் வருகின்றனர். இந்திராணி கதாபாத்திரம் கதைக்குத் தேவையில்லாதது. அவரை கவர்ச்சிக்காக மட்டுமே பயன்படுத்தியுள்ளனர் எனவும் விமர்சித்து வருகின்றனர்.
படத்தில் திரிஷா ஒரு விலை மாதுவைப் போன்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஒரு முன்னணி நடிகையாக இருக்கும் அவர் ஏன் இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் எனவும் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். இந்த டம்மி கதாபாத்திரத்திற்காகவா புரமோஷனில் இவ்ளோ பில்டப் கொடுத்தீர்கள்? எனவும் வினவி வருகின்றனர்.
திரிஷாவின் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு உள்ளதாக கூறப்பட்டது. அவர் ஒரு விலைமாதுவாக மாறியதற்கான காரணம், இசை உலகில் அவர் சாதித்தது போன்ற காட்சிகள் இருக்கும் என்றும் கூறப்பட்டது. ஆனால், அந்தக் காட்சிகள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளன.
இதற்காக கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் ஆகியோரையும் விமர்சித்து வருகின்றனர். இவை அனைத்தும் படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளன.
எப்படியோ, தமிழ் சினிமா ரசிகர்கள் மறந்துபோன அபிராமிக்கு ரீஎன்ரி கிடைத்துள்ளது. இவ்வளவு ஏன், யாரென்றே தெரியாத ஐஸ்வர்யா லட்சுமி என்பவருக்குக்கூட, சிம்புவின் தங்கை சந்திரா என்ற நல்ல கதாபாத்திரம் கிடைத்திருக்கிறது. ஆனால், தக் லைஃப் படத்தில் திரிஷா வைத்த நம்பிக்கை பொய்த்துப் போனது துரதிர்ஷ்டமே.!
