ரஜினியுடன், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சந்திப்பு..

Web Ads

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கி வெளியான ‘கூலி’ படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இருப்பினும், வசூலில் சாதனை படைத்து வருகிறது.

விடுமுறை நாளான நேற்று ‘கூலி’ படம் இந்தியாவில் ரூ.34 கோடி வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில், தமிழ் மூலம் அதிகபட்சமாக ரூ. 22.5 கோடி கிடைத்திருக்கிறது. தெலுங்கு மூலம் ரூ. 6.5 கோடியும், இந்தி மூலம் ரூ. 4.65 கோடியும், கன்னடம் மூலம் ரூ. 35 லட்சமும் கிடைத்திருக்கிறது. மூன்றாவது நாள் வசூலுடன் ஒப்பிடும்போது 13 சதவீதம் குறைவு ஆகும்.

ரஜினிகாந்த் 74 வயதிலும் தேவா என்ற கேரக்டரில் ஆக்சன் அவதாரம் எடுத்துள்ள இப்படம், ரசிகர்களை ஈர்த்துள்ளது. அவ்வகையில், திரைக்கு வந்த நான்கு நாட்களில் இந்தியாவில் ரூ. 193.28 கோடி வசூல் செய்திருக்கிறது. ரிலீஸான அன்று ரூ. 65 கோடியும், இரண்டாவது நாள் ரூ. 54.75 கோடியும், மூன்றாவது நாள் அதாவது சனிக்கிழமை அன்று ரூ. 39.5 கோடியும் வசூல் செய்துள்ளது.

வலைத்தளங்களில் இப்படத்திற்கு எதிர்மறையான விமர்சனக் கணைகள் தொடுப்பது தொடர்ந்தாலும், வசூலைப் பொறுத்தவரையில் வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கிறது.

ஜூனியர் என்.டி.ஆர்., ஹிருத்திக் ரோஷன் ஆகியோர் இணைந்து நடித்து ஆகஸ்ட் 14-ந்தேதி ரிலீஸான ‘வார்-2’ படத்தால் ‘கூலி’ படம் அளவுக்கு வசூல் செய்ய முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்தை, அவரது வீட்டில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று (ஆகஸ்ட் 18) திடீரென சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது, சினிமா துறையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினிக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார்.

இதேபோல, கூலி திரைப்படத்தின் வெற்றிக்காக ரஜினிக்கு நயினார் நாகேந்திரன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பானது சுமார் 30 நிமிடம் நடைபெற்றது. மேலும், இந்தச் சந்திப்பில் ரஜினியிடன் அரசியல் குறித்து பேசியதாக கூறப்படுகிறது.

tamilnadu bjp leader nainar nagendran meet actor rajini
tamilnadu bjp leader nainar nagendran meet actor rajini