புரொமோஷன் புகழ்ச்சி: சாய் பல்லவியின் பேச்சை கேட்டு, கார்த்திக்கு வந்த பெரிய வெட்கம்

சினிமா பிரபலங்களின் புரொமோஷன் என்றாலே, இவர் நடித்த படத்தை அவர் புகழ்வதும், அவர் நடித்த படத்தை இவர் புகழ்வதும் வாடிக்கைதான். இதற்கு சரியான ரிசல்ட் வழங்குவோர் டிக்கெட் வாங்கிப் படத்தை பார்ப்பவர்கள்தான்.! சரி..விஷயத்திற்கு வருவோம்..
கடந்த ஆண்டு சாய் பல்லவி நடிப்பில் வெளியான ‘அமரன்’ படம் செம ஹிட்டான நிலையில், இந்த ஆண்டு பிப்ரவரி 7-ம் தேதி நாக சைதன்யாவுடன் ஜோடி சேர்ந்த ‘தண்டேல்’ திரைப்படம் வெளியாகிறது.
இந்த படத்திற்கான புரமோஷன் நிகழ்ச்சியில், சாய் பல்லவி ‘ராமாயணா’ படத்தில் சீதையாக நடித்து வருவது பற்றி கார்த்தி புகழ்ந்து பேசினார்.
அப்புறம் பேசிய சாய் பல்லவி, ‘கார்த்தியின் சமீபத்திய படமான ‘மெய்யழகன்’ படத்தை பார்த்தேன். அந்த படத்தை பார்த்தால், யாராக இருந்தாலும் ஒரு சின்ன மனமாற்றம் நிச்சயம் நிகழும் என நம்புகிறேன்.
‘பருத்தி வீரன்’ படத்தில் ஒரு பக்காவான பொறுக்கி பாயாக நடித்திருப்பார். சமீபத்தில் வெளியான ‘மெய்யழகன்’ படத்தில் வெகுளியான நல்ல உள்ளம் கொண்ட மனிதராக அப்படியே இருப்பார். இயல்பாகவே அவருக்குள் அப்படியொரு புனிதத்தன்மை இருந்தால் மட்டும் தான் திரையில் அதை அப்படியே கடத்த முடியும் என நினைக்கிறேன்’ என கார்த்தியை பாராட்டிப் பேசி.. லிட்டர் லிட்டராய் வழிய, வெட்கப்படவே வைத்துவிட்டார் சாய் பல்லவி.
முன்னதாக, செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்த ‘என்ஜிகே’ படத்தில் நடித்துள்ள சாய் பல்லவி மேலும் பேசுகையில், ‘நான் சூர்யாவோட ஃபேன். ‘ரெட்ரோ’ படத்தின் புரொமோவை பார்த்து மிரண்டு போய் விட்டேன். கார்த்திக் சுப்புராஜ் சார் சூர்யா சாரை வேறமாதிரி செதுக்கிட்டு வர்றீங்கன்னு தெரியுது. ‘ரெட்ரோ’ படத்துக்காக ஐ எம் வெயிட்டிங்’ என பேச அரங்கத்தில் இருந்த சூர்யா ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர்.
இதனைத் தொடர்ந்து, நாக சைதன்யா-சாய் பல்லவி நடித்துள்ள ‘தண்டேல்’ படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெற்றிப் படமாக மாறும் என கார்த்தி உள்பட சிறப்பு விருந்தினர்கள் வாழ்த்திப் பேசினர். தண்டேல் மற்றும் ரெட்ரோ வரட்டும், அப்ப.. பார்க்கலாம்.!
