ரவிமரியா இல்ல மணவிழா: நாஞ்சில் பி.சி.அன்பழகன் பகிர்ந்த பண்பாட்டு நிகழ்வு..

இருமனம் ஒருமனமாகும் நறுமண நிகழ்வே திருமணம். இத்தகு திருமண நிகழ்ச்சியில் நடைபெற்ற ஒரு கலாச்சார நிகழ்வு தற்போது வைரலாகி வருகிறது. இது குறித்துப் பார்ப்போம்..
இயக்குநரும் நடிகருமான ரவிமரியாவின் மகள் லிஸி-இன்பேன்ட் பிரிட்டோ திருமணம் இனிதாய் நடைபெற்றது. திருமண விழாவில் முன்னாள் முதலமைச்சரும் அஇஅதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி கே. பழனிச்சாமி, முன்னாள் அமைச்சர்கள், இயக்குநரும் அதிமுக நட்சத்திர பேச்சாளருமான நாஞ்சில் பி.சி. அன்பழகன் மற்றும் இயக்குநர்கள் எஸ்.எழில், ஆர்.கே. செல்வமணி இவர்களுடன் லியாகத் அலிகான், மன்சூர் அலிகான், சிவனி சதீஷ், திருக்குமார் உள்பட திரைப் பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தி மகிழ்ந்தனர்.
‘இந்நிகழ்ச்சியில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மணமேடை ஏறும்போது ஒரு நற்செயல் செய்தார். அது பார்த்து எனக்குப் புல்லரித்துவிட்டது’ என நாஞ்சில் பி.சி. அன்பழகன் நெகிழ்ந்து கூறியுள்ளார்.
அதாவது அவர் தெரிவிக்கையில், ‘அந்த நற்செயல் என்னவென்றால் நாம் எங்கு சென்றாலும் காலணியை போட்டுக் கொண்டு செல்வதுதான் வழக்கம். ஆனால் தலைவர், தனது காலணியை ஒரு ஓரமாய் கழற்றி வைத்துவிட்டு மேடை ஏறுகிறார். அவர் மணமக்களை வாழ்த்தி பரிசு கொடுத்து விட்டு வரும்போது நான் கேட்டேன்,
‘தலைவரே நீங்க செருப்பை கழற்றி விட்டு மேடையேறி இருக்கிறீர்களே, எனக்கு மெய் சிலிர்த்து விட்டது’ என்றேன். அதற்கு அவர், ‘ஆமாப்பா.. இதுதான் நம்ம பண்பாடு. கல்யாணம் என்பது நல்ல நிகழ்வு இல்லையா. அதனால், இந்த நெறிமுறையை கடைப்பிடித்தேன்’ என்றார்.
அப்போது என் நினைவுக்கு வந்தது என்னவென்றால், எந்த வயலுக்கோ தோட்டத்துக்கோ போனாலும், ஸ்டாலின் ஷூ போட்டிருப்பார், க்ளவுஸ் மாட்டியிருப்பார். நடப்பதற்குக்கூட அங்கே உதயநிதிக்கும் கான்கிரீட் பாதை போட்டிருக்க வேண்டும்.
ஆனால் இவர், வயல் வரப்பில் நடக்கையிலும் கூட செருப்பு அணிந்திருக்க மாட்டார். மேலும், பூத்தூவி புதிதாக ஓர் அணையை திறந்து வைக்கும் நிகழ்ச்சியிலும் செருப்பு அணிந்திருக்க மாட்டார். ஆக, இந்தப் பண்பாடு உணவளிக்கும் அன்னை வயலிலிருந்து வருகிறது அல்லவா. அவ்வகையில், மாறாத அதே பண்பாடு கல்யாண நிகழ்விலும் தலைவரிடம் நான் பார்த்து ஆச்சரியப்பட்டேன்’ என தமிழுணர்வுடன் நெஞ்சம் நெகிழ்ந்து தெரிவித்துள்ளார் நாஞ்சில் பி.சி. அன்பழகன்.
