கேப்டன் விஜயகாந்துக்கு முதல்வர் ஸ்டாலின், ரஜினி, கமல் நினைவஞ்சலி

கேப்டன் விஜயகாந்த் மறைந்து இன்று ஓராண்டு ஆவதால் அவரது ரசிகர்கள், தொண்டர்கள், நண்பர்கள், திரைத்துறையினர் என பலரும் அவரது நினைவிடத்தில் குவிந்து நினைவஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

கேப்டன் நினைவு நாளை முன்னிட்டு தேமுதிக ஏற்பாடு செய்துள்ள, குருபூஜைக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களுக்கு தேமுதிக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கேப்டனின் முதலாமாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவருக்கு தனது நினைவஞ்சலியை பகிர்ந்துள்ளார்.

‘மாசற்ற மனதுக்கும் தூய அன்பிற்கும் சொந்தக்காரராக விளங்கி, மண்ணைவிட்டு மறைந்தாலும் நமது நெஞ்சங்களில் வாழும் நண்பர் – கேப்டன் விஜயகாந்த் அவர்களை நினைவுகூர்கிறேன்!’ என பதிவிட்டுள்ளார். மேலும், அவருடன் எடுத்துக் கொண்ட பழைய புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

ரஜினிகாந்த் தனது எக்ஸ் பக்கத்தில், ‘என் அன்புக்குரிய கேப்டனின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தில் அவருக்கு என் நினைவஞ்சலி’ என பதிவிட்டுள்ளார்.

கமல்ஹாசன் தனது எக்ஸ் பக்கத்தில், ‘அன்பு நண்பர், தேமுதிக நிறுவனர், கேப்டன் விஜயகாந்த் அவர்கள் மறைந்து ஓராண்டாகிறது. அவரது இழப்பை மக்களின் மனம் ஏற்க மறுக்குமளவிற்குப் பெரும் தாக்கத்தை உருவாக்கிச் சென்றிருக்கிறார் கேப்டன். வறியோர்க்கு உதவும் ஈகை, எளியோரின் பக்கம் நிற்கும் நேர்மை, மனதில் பட்டதைப் பேசும் துணிச்சல் ஆகிய அவரது பண்புகள் தமிழ் மனங்களில் எப்போதும் பசுமையாக நிலைத்திருக்கும்’ என பதிவிட்டுள்ளார்.

மண்ணைவிட்டு மறைந்தாலும், மக்கள் எண்ணமெல்லாம் நிறைந்திருக்கிறார் கேப்டன் அவர்கள். அவரது புகழ் வாழிய வாழியவே என நாமும் நினைவஞ்சலி செலுத்துவோம்.!

rajini and kamal post vijayakanth death anniversary remember