உ.பி. முதல்வர் யோகியுடன் பிரபுதேவா-மோகன்பாபு திடீர் சந்திப்பு
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நண்பரான மோகன்பாபு, தனது மகன் விஷ்ணு மஞ்சு மற்றும் பிரபுதேவாவுடன் உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்துள்ளனர். இது பற்றிய விவரம் காண்போம்..
அதாவது வரும் 25-ம் தேதி ‘கண்ணப்பா’ திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், அந்த படத்திற்கு எதிராக நெகட்டிவிட்டி பரவி வரும் நிலையில், ரிலீஸ் தேதியை தள்ளி வைத்தனர்.
இந்நிலையில், யோகி ஆதித்யநாத்தை சந்தித்த நிலையில், தற்போது அவர் முன்னிலையில், புதிய ரிலீஸ் தேதியை ‘கண்ணப்பா’ பட தயாரிப்பாளரான மோகன் பாபு மற்றும் ஹீரோவான விஷ்ணு மஞ்சு அறிவித்துள்ளனர். அவ்வகையில், வரும் ஜூன் 27-ம் தேதி உலகம் முழுவதும் ‘கண்ணப்பா’ படம் வெளியாகிறது.
‘கண்ணப்பா’ படத்தின் பாடல்களுக்கு கொரியோகிராஃபி செய்துள்ள ‘நடனப்புயல்’ பிரபுதேவாவும், மோகன்பாபு-விஷ்ணு மஞ்சுவுடன் இணைந்து யோகி ஆதித்யநாத்தை சந்தித்து, சால்வை அணிவித்து மரியாதை செலுத்திய காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இப்படத்தில் அக்ஷய் குமார், பிரபாஸ், மோகன்லால், காஜல் அகர்வால் உள்பட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். முன்னதாக ‘கண்ணப்பா’ பட டிரைலர் வெளியாகி கடும் விமர்சனங்கள் குவிந்தன. அதனால், வட இந்தியாவில் சரியாக புரமோஷன் செய்து படத்தை பான் இந்தியா ரிலீஸாக வெளியிட்டால் மட்டுமே லாபத்தை எதிர்பார்க்க முடியும் என்பதால், தற்போது யோகி ஆதித்யநாத்துடன் சந்திப்பு நிகழ்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
பொதுவாக, யார் நடித்தாலும், இயக்கினாலும், என்ன பட்ஜெட்டானாலும் ரசிகர்களை ஈர்க்கும் வகையிலான போரடிக்காத திரைக்கதை வெற்றி பெறும் என்பதே திரை வரலாறு.

