உங்களையெல்லாம் கடவுளாக நினைத்து மன்னிப்பு கேட்கிறேன்: மிஷ்கின் பேச்சு..
இயக்குனர் மிஷ்கின் ஏதாவது படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவோ, டிரெய்லர் வெளியீட்டு விழாவோ கலந்துகொண்டு பேசினால், சர்ச்சையாகி விடுகிறது.
சமீபத்தில் ‘பாட்டல் ராதா’ படத்தின் விழாவிலும் சர்ச்சையாக பேசினார். அவரது பேச்சுக்கு கடுமையான கண்டனத்தை முன்வைத்தார்கள் என்பது தெரிந்ததே.
இந்நிலையில், ‘பேர்ட் கேர்ள்’ டீசர் வெளியீட்டு விழாவில் பேசிய மிஷ்கின், ‘என்னுடைய பேச்சுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்கள்.
வெற்றி கொடுத்த மிதப்பில்தான் அப்படி பேசியதாக பாடலாசிரியர் தாமரை கூறியிருக்கிறார். சினிமாவில் 18 வருடங்களாக நான் போராடிக் கொண்டிருக்கிறேன் என்பதை அவர் புரிந்துகொள்ள வேண்டும்.
தாமரை, இயக்குநர் லெனின், நடிகர் அருள்தாஸ், தயாரிப்பாளர் தாணு உள்ளிட்டோரிடம் நான் அந்தப் பேச்சுக்காக மன்னிப்பு கேட்கிறேன். அன்றைய தினம் நகைச்சுவைக்காக மட்டும்தான் அப்படி பேசினேன்.
‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ என்று பட பெயர் வைத்ததற்கு ஏன் அப்படி வைத்தீர்கள்? என்று யாரும் கேட்கவில்லை. ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தின் டிரெய்லருடைய இறுதியில் வரும் கெட்ட வார்த்தையை யாரும் ஆபாசம் என்று சொல்லவில்லை. நான் பேசியது ஆபாசம் என்று சொல்கிறார்கள்.
மன்னிப்பு கேட்க என்றுமே நான் தயங்கமாட்டேன். ‘உதிரிப்பூக்கள்’ படத்தின் க்ளைமேக்ஸில் ஒரு கேரக்டர், ஊர்க்காரர்களை பார்த்து ‘உங்களை நான் கெட்டவனாக மாற்றிவிட்டேன்’ என சொல்லும். நண்பர்களே.. உங்களையெல்லாம் கடவுளாக நினைத்து மன்னிப்பு கேட்கிறேன்’ என்றார்.