இயக்குனர் மாரி செல்வராஜின் புதிய படம் தொடர்பான தகவல் வைரலாகி வருகிறது.

பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் மாரி செல்வராஜ். முதல் படத்திலேயே மாபெரும் வெற்றியை கண்ட இவரது இயக்கத்தில் அடுத்ததாக வெளியான தனுஷின் கர்ணன் திரைப்படமும் சூப்பர் ஹிட் அடித்து இருந்தது. அதன் பிறகு ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடம் பிடித்து வலம் வந்த மாரி செல்வராஜ் இயக்கத்தில் சமீபத்தில் மாமன்னன் திரைப்படம் வெளியானது. உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வடிவேலு, கீர்த்தி சுரேஷ், பகத் பாஸில் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான இப்படம் திரையரங்குகளில் வெற்றி பெற்றதை தொடர்ந்து தற்போது ஓடிடி தளத்திலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் அடுத்ததாக கபடியை மையமாகக் கொண்டு உருவாக இருக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன் நிறுவனம் தயாரிப்பில் உருவாகப் போகும் இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற செப்டம்பர் மாதம் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இதன் படப்பிடிப்பு நெல்லை, தூத்துக்குடி பகுதியில் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இப்படம் கபடி வீரர் மணத்தி கணேசனின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது.