‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தமிழ் திரையுலகில் இளம் தலைமுறையின் கவனத்தை ஈர்த்துவரும் நடிகர் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்துள்ள ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) திரைப்படம், இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி, வரும் ஏப்ரல் 3ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.
ஏற்கனவே வெளியான “தீமா தீமா”, “பட்டும்மா”, “எனக்கென யாருமில்லையே” போன்ற பாடல்கள் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன. அதனைத் தொடர்ந்து வெளியான டீசரும் நல்ல எதிர்பார்ப்பை உருவாக்கிய நிலையில், தற்போது வெளியீட்டு தேதி அறிவிப்பு ரசிகர்களின் உற்சாகத்தை மேலும் அதிகரித்துள்ளது.
சயின்ஸ் பிக்ஷன் பின்னணியில், எதிர்காலத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த படம், காதல் அரிதான ஒன்றாக மாறிய உலகில், தனது காதலை காப்பாற்ற போராடும் இளைஞனின் கதையை பேசுகிறது. புதுமையான கான்செப்ட், இளம் தலைமுறையை கவரும் அம்சங்கள் மற்றும் உணர்ச்சி மிக்க காட்சிகள் இணைந்து, தமிழ் சினிமாவில் ஒரு வித்தியாசமான அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதனுடன் கிரித்தி ஷெட்டி, எஸ். ஜே. சூர்யா, யோகி பாபு, கௌரி கிஷன், ஷாரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், சீமான் சிறப்பு தோற்றத்தில் தோன்றுகிறார்.
ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். படத்தொகுப்பை பிரதீப் ஈ. ராகவ் மேற்கொண்டுள்ள நிலையில், கலை இயக்கம் மற்றும் தயாரிப்பு வடிவமைப்பை டி. முத்துராஜ் கவனித்துள்ளார்.
குடும்பம் முழுவதும் ரசிக்கும் வகையில் உருவாகியுள்ள இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ். எஸ். லலித்குமார் மற்றும் ரௌடி பிக்சர்ஸ் சார்பில் நடிகை நயன்தாரா தயாரித்துள்ளனர்.
பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) திரைப்படம், 2026 ஏப்ரல் 3ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வெளியீட்டு அறிவிப்பு போஸ்டருக்குப் பிறகு, ட்ரெய்லர் மற்றும் ஸ்னீக் பீக் போன்ற அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.
