லியோ திரைப்படத்தில் நா ரெடி பாடலை விஜயுடன் இணைந்து பிக் பாஸ் பிரபலம் பாடி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

கோலிவுட் திரை உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் உச்ச நட்சத்திரங்களின் திரைப்படங்களில் ஒன்றாக இருக்கும் திரைப்படம் லியோ. தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் இப்படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. அனிருத் இசையமைப்பில் 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தில் திரிஷா, பிரியா ஆனந்த், அர்ஜுன், சஞ்சய் தத், மன்சூர் அலிகான், கௌதம் மேனன், மிஷ்கின், சாண்டி மாஸ்டர் உள்ளிட்ட ஏராளமான முன்னணி திரை நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

ஏற்கனவே இப்படம் தொடர்பான அப்டேட்கள் அதிக அளவில் இணையதளத்தில் வெளியாகி படம் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்திருக்கும் நிலையில் வரும் ஜூன் 22ஆம் தேதி விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு இப்படத்தில் இடம் பெற்றிருக்கும் முக்கிய பாடலான நா ரெடி என்னும் பாடல் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் அனிருத் இசையமைப்பில் உருவாகி இருக்கும் இப்பாடலை தளபதி விஜய் பாடி இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்ததை தொடர்ந்து தற்போது புதிய அப்டேட்டாக அப்பாடலை விஜய் உடன் இணைந்து பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான அசல் கோளாறு பாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இவர் ஜோர்தாலே பாடல் மூலம் பிரபலமானது குறிப்பிடத்தக்கது.