இந்தியா சார்பில், ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட திரைப்படம் வெளியேற்றம்..
பொதுவாக, விருது என்பது ஒரு கலைஞனை மேலும் ஊக்கப்படுத்தும். வரவில்லையென்றாலும், மக்கள் கொடுக்கும் விருதே என்றும் மகத்தானது. அதாவது, விஷயத்திற்கு வருவோம்..
உலக அளவில் உயரிய விருதாக கருதப்படுகிறது ஆஸ்கர். திரைத்துறையில் பல்வேறு பிரிவுகளில் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய திரைப்படம் ஒன்று ஆஸ்கர் விருது போட்டியில் இருந்து வெளியேறியுள்ளது ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரதிபா ரந்தா, ஸ்பர்ஷ் ஸ்ரீவஸ்தவா நிதான்ஷி கோயல், சாயா கடம் உள்ளிட்டோர் நடிப்பில் கிரண் ராவ் இயக்கத்தில் வெளியான ‘லபாதா லேடீஸ்’ தான் அந்த திரைப்படம்.
இப்படத்தில், ‘புதிதாக திருமணமான இரண்டு பெண்கள் ஒரே ரயிலில் பயணம் செய்து, தவறுதலாக வெவ்வேறு இடங்களுக்கு சென்று விடுகின்றனர். இதன் பின்னர் நடக்கும் சம்பவங்களை நகைச்சுவை கலந்து இப்படம் பேசியிருந்தது.
பெண் கல்வியின் முக்கியத்துவத்தை மையமாக வைத்து, கடந்த மார்ச் 1-ம் தேதி வெளியான இப்படத்தை, அமீர்கானின் முன்னாள் மனைவி கிரண்ராவ் இயக்கியிருந்தார். படத்தை அமீர்கான் மற்றும் கிரண்ராவ் இருவரும் தயாரித்திருந்தனர்.
48-வது டொரண்டோ சர்வதேச திரைப்பட விழாவில், ரிலீசுக்கு முன்பாக திரையிடப்பட்ட இப்படத்தை அனைவரும் பாராட்டினர்.
இந்நிலையில் இந்த ஆண்டு நடைபெறும் 97-வது ஆஸ்கர் விருது போட்டிக்கு இந்தியா சார்பில், ஹிந்தி மொழியில் வெளியான ‘லபாதா லேடீஸ்’ படம் பரிந்துரைக்கப்பட்டது.
தமிழில் இருந்து மகாராஜா, வாழை, கொட்டுக்காளி, தங்கலான், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், ஜமா உள்பட மொத்தம் 29 இந்திய படங்கள் ஆஸ்கர் விருது போட்டிக்கு பரிந்துரைக்கப்பட்டன.
இந்த படங்களில் 2025-ம் ஆண்டு ஆஸ்கர் விருதுக்கான சிறந்த வெளிநாட்டு படத்திற்கான பிரிவில் இந்தியா சார்பில் இருந்து ‘லபதா லேடீஸ்’ அதிகாரப்பூர்வ நுழைவாக தேர்வு செய்யப்பட்டது. இந்நிலையில், ஆஸ்கர் போட்டியில் இருந்து வெளியேறியுள்ளது.
சிறந்த சர்வேதச திரைப்படங்கள் பிரிவில் அடுத்த கட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 15 படங்களில் ‘லபதா லேடீஸ்’ இடம் பெறவில்லை.
ஏற்கனவே சொன்னதுபோல, ஒரு படைப்பானது மக்கள் மனதில் இடம் பிடிப்பதை விட, விருதொன்றும் பெரிதில்லை.!