காந்தாரா 2 திரைப்படம் குறித்த அப்டேட் வைரலாகி வருகிறது.

கன்னட திரை உலகில் பிரபல முன்னணி நடிகர் மற்றும் இயக்குனராக வலம் வருபவர் ரிஷப் ஷெட்டி. இவரது இயக்கம் மற்றும் நடிப்பில் உருவான காந்தாரா திரைப்படம் கடந்த ஆண்டு செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியானது. சிறிய பட்ஜெட்டில் உருவாகி இருந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வசூலை குவித்து அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடிக்க செய்திருந்தது.

முதலில் கன்னட திரைப்படமாக வெளியான இப்படம் மாபெரும் வரவேற்பால் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட அனைத்து மொழிகளிலுமே டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி வசூலை அள்ளியது. கர்நாடகத்தில் வாழும் பழங்குடி மக்களின் சமய வழிபாட்டை மையமாக வைத்து உருவாகியிருந்த இப்படத்தை திரை பிரபலங்கள் பலரும் பாராட்டி வந்த நிலையில் இப்படத்தின் இரண்டாவது பாகத்தை உருவாக்க படக்குழு திட்டமிட்டு இருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியாகியிருந்தது.

இந்நிலையில் புதிய அப்டேட்டாக, இப்படத்தின் ஸ்கிரிப்ட் பணிகளை இயக்குனரும் நடிகருமான ரிஷப் ஷெட்டி விரைவில் முடிக்க இருப்பதாகவும், படப்பிடிப்பு பணிகளை வரும் ஆகஸ்ட் மாதம் 27ஆம் தேதி தொடங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இம்முறை பிரம்மாண்ட பட்ஜெட்டில் பான் இந்தியா திரைப்படமாக உருவாக இருக்கும் இப்படம் ரிஷப் ஷெட்டி முன்பே கூறியிருந்தது போல் காந்தாரா படத்தின் முன்கதையை (prequel) அடிப்படையாகக் கொண்டு உருவாக்க இருப்பதாக படக்குழு கூறியுள்ளது. மேலும் இப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த தகவல் ரசிகர்களை குஷிப்படுத்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.