நடிகர் மம்மூட்டியின் தாயார் மறைவிற்கு நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்து வெளியிட்டு இருக்கும் பதிவு வைரலாகி வருகிறது.

இந்திய திரை உலகில் தவிர்க்க முடியாத மாபெரும் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் கமல்ஹாசன். மாபெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள இவர் தற்போது விக்ரம் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் சமூக வலைத்தள பக்கங்களிலும் ஆக்டிவாக இருந்து வரும் கமல்ஹாசன் தற்போது மலையாள திரை உலகின் முன்னணி நடிகரான மம்மூட்டியின் தாயார் மறைவு குறித்து இரங்கல் தெரிவித்து ஆறுதலான பதிவினை வெளியிட்டு இருக்கிறார். அது தற்போது வைரலாகி வருகிறது.

அதாவது, நடிகர் மம்முட்டியின் தாயார் பாத்திமா இஸ்மாயில் (99) வயது முதிர்வு மற்றும் நோயால் பாதிக்கப்பட்டு கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததையடுத்து நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதற்கு திரை பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் தங்களது இரங்கலை தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “தாயார் மறைவு குறித்து கேள்விப்பட்டேன். நீங்கள் அடைந்த உயரத்தை காண உங்கள் தாய் இருந்தது உங்கள் அதிர்ஷ்டம். அவர் மிகுந்த திருப்தியுடன் கிளம்பியிருப்பார். காலம்தான் உங்களின் வலியை ஆற்றும். உங்களின் கவலையை பகிர்ந்து கொள்கிறேன்” என்று குறிப்பிட்டு நண்பர் மம்முட்டிக்கு ஆறுதல் தெரிவித்திருக்கிறார்.