பேருந்து ஓட்டும் முதல் பெண் ஓட்டுனர் ஷர்மிளாவுக்கு நடிகர் கமல்ஹாசன் பரிசு வழங்கியுள்ளார்.

இந்திய திரை உலகில் தவிர்க்க முடியாத மாபெரும் உச்ச நட்சத்திரமாக விளங்கி வருபவர் நடிகர் கமல்ஹாசன். தற்போது ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வரும் இவர் இதனைத் தொடர்ந்து தெலுங்கில் பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி வரும் Project K திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்த நிலையில் நடிகர் கமல்ஹாசன் பேருந்து ஓட்டும் பணியில் இருந்து விலகிய முதல் பெண் ஓட்டுனரான ஷர்மிளாவுக்கு கமல் பண்பாட்டு மையம் சார்பில் புதிய காரை வாங்குவதற்கான பணத்தை பரிசாக வழங்கியுள்ளார். மேலும், ஷர்மிளா ஒரு ஓட்டுனராக மட்டுமே இருந்து விட வேண்டியவர் அல்ல, பல்லாயிரம் ஷர்மிளாக்களை உருவாக்க வேண்டியவர் என்பதே என் நம்பிக்கை என தெரிவித்த கமல்ஹாசன் வாடகை கார் ஓட்டும் தொழில் முனைவராக தனது பயணத்தை ஷர்மிளா மீண்டும் தொடங்குவார் என்று கூறியிருக்கிறார். இவரது இந்த செயலை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.