ட்ரெய்லர் வெளியீட்டிற்கு முன்பாக ஜவான் திரைப்படத்தின் prevue வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முக்கிய இயக்குனர்களில் ஒருவராக விளங்கி வருபவர் அட்லீ. ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் அனைவருக்கும் பரிச்சயமான இவர் விஜய் நடிப்பில் தெறி, மெர்சல், பிகில் உள்ளிட்ட மூன்று படங்களை இயக்கி தமிழ் ரசிகர்கள் மனதில் தனக்கென தனி இடம் பிடித்தார்.

தற்போது பாலிவுட் திரை உலகில் அறிமுகமாகியுள்ள இவர் தனது முதல் படமாக ஷாருக்கான் நடிப்பில் உருவாகியுள்ள “ஜவான்” திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். நயன்தாரா, தீபிகா படுகோனே, விஜய் சேதுபதி, யோகி பாபு உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருக்கும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

வரும் செப்டம்பர் 7 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக வெளியாக இருக்கும் இப்படத்தின் ட்ரெய்லர் வரும் 12ஆம் தேதி வெளியாகும் என்று படகுழு ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் தற்போது அதிக ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் இதற்கு முன்பாக ஒரு சிறிய முன்னோட்ட வீடியோவை இன்று காலை 10:30 மணி அளவில் வெளியிட்டுள்ளது. அந்த மிரட்டலான வீடியோவை ரசிகர்கள் உற்சாகத்துடன் கண்டு களித்து வருவதோடு லைக்குகளை குவித்து ட்ரெண்டிங்காக்கி வருகின்றனர்.