“நெருக்கடிகளைத் தாண்டி மக்களுக்காகவே வந்தேன்” – தமிழக மக்களுக்கு விஜய் உருக்கமான மடல்!

Web Ads

தமிழக சட்டமன்றத் தேர்தல் பரப்புரை இன்றுடன் நிறைவடையும் நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது அரசியல் பயணத்தின் பின்னணியில் உள்ள வலிகளையும், இலக்குகளையும் விளக்கி மக்களுக்கு உருக்கமான திறந்த மடல் ஒன்றை எழுதியுள்ளார்.

அரசியல் எதிரிகளைச் சாடுதல்: தனது கடிதத்தில், அரசியல் களத்தில் தான் சந்தித்து வரும் சொல்லொணா நெருக்கடிகளையும் வேதனைகளையும் பட்டியலிட்டுள்ள விஜய், மக்கள் விரோத தீயசக்தியான திமுகவையும், பிளவுவாத சக்தியான பாஜகவையும் மிகக் கடுமையாகச் சாடியுள்ளார். அதிகாரங்களை ஏவி தன்னை மிரட்டவோ அல்லது ஆதாயங்களைக் காட்டி அடக்கவோ முடியாது என்றும், பாசிச மனநிலை கொண்ட கட்சிகளின் அழுத்தங்களுக்கு தான் ஒருபோதும் அடிபணியப் போவதில்லை என்றும் அவர் ஆணித்தரமாகத் தெரிவித்துள்ளார்.

மக்களே எனது சக்தி: எவ்வித அரசியல் பின்னணியும் இன்றி களத்திற்கு வந்த தன்னை, “நாங்க பார்த்துக்கிறோம்” எனத் தட்டிக் கொடுத்து வரவேற்ற தமிழ்நாட்டு மக்களின் அன்பே தனது மிகப்பெரிய உந்துசக்தி என விஜய் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். தமிழக வெற்றிக் கழகம் என்பது ஊழல் சக்திகளால் வீழ்த்த முடியாத நேர்மையின் நெருப்புக்கோளம் என்றும், சமூகநீதியின் காவலரண் என்றும் அவர் வர்ணித்துள்ளார்.

வாக்குறுதியும் எச்சரிக்கையும்: தவெக-வின் நோக்கத்தையும் தாக்கத்தையும் எந்தக் கொம்பனாலும் அசைக்க முடியாது எனத் தெரிவித்த விஜய், சுயலாபத்திற்காக அரசியல் நடத்தும் கட்சிகளுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். மற்ற சின்னங்களுக்கு வாக்களிப்பது பிளவுவாத சக்திகளுக்கே சாதகமாக அமையும் எனக் குறிப்பிட்ட அவர், மாற்றத்திற்கான ஒரு வாய்ப்பை வழங்கும்படி உருக்கமாக வேண்டியுள்ளார்.