GV Prakash and Aishwarya Rajesh to share screen space for the first time
GV Prakash and Aishwarya Rajesh to share screen space for the first time

‘இசை அசுரன்’ ஜீ. வி. பிரகாஷ் குமார்- ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கவிருக்கும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தின் தொடக்க விழா சென்னையில் நேற்று சிறப்பாக நடைபெற்றது. தமிழ் திரையுலகைச் சார்ந்த ஏராளமான பிரபலங்கள் கலந்துக் கொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இப்படத்தின் படபிடிப்பு இன்று தொடங்குகிறது.

‘செத்தும் ஆயிரம் பொன்’ எனும் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தயாராகும் பெயரிடப்படாத புதிய படத்தில் முதன்முறையாக ஜீ. வி. பிரகாஷ் குமாரும், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இவர்களுடன் காளி வெங்கட், இளவரசு,ரோஹிணி, ‘தலைவாசல்’ விஜய், கீதா கைலாசம், ‘பிளாக் ஷீப்’ நந்தினி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜெகதீஷ் சுந்தரமூர்த்தி ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு கதையின் நாயகனாக நடிக்கும் ஜீ. வி. பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். கிருபாகரன் பட தொகுப்பு பணிகளை மேற்கொள்ள, கலை இயக்கத்தை பிரகதீஷ் கவனிக்கிறார். ஆடை வடிவமைப்பாளராக அனுஷா மீனாட்சி பணியாற்றும் இந்த படத்தில் இடம்பெறும் பாடலொன்றை ராப் பாடகரும், பாடலாசிரியருமான அறிவு எழுதுகிறார். ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை நட்மெக் புரொடக்ஷன்ஸ் எனும் பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் வருண் திரிபுரனேனி, அபிஷேக் ராம் ஷெட்டி மற்றும் பிருத்விராஜ் ஆகியோர் இணைந்து பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறார்கள்.

நடிகை அமலா பால் கதையின் நாயகியாக நடித்து மலையாளத்தில் வெளியாகி, வெற்றிப் பெற்ற ‘தி டீச்சர்’ என்ற படத்தைத் தயாரித்திருக்கும் நட்மெக் புரொடக்ஷன்ஸ், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடித்து விரைவில் வெளியாக இருக்கும் ‘மாணிக்’ எனும் படத்தையும் தயாரித்திருக்கிறது. தமிழ் மற்றும் இந்தி என இரண்டு மொழிகளிலும் தயாராகியிருக்கும் இந்த திரைப்படத்தை பிரம்மாண்டமான முறையில் வெளியிடுவதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து மூன்றாவது படைப்பாக இந்த திரைப்படத்தை தயாரிக்கிறது.மேலும் இந்நிறுவனம், நடிகை ஐஸ்வர்யா ராஜேசுடன் இரண்டாவது முறையாக இணைந்திருக்கிறது. இப்படத்தின் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் க்யூப் நிறுவனத்தைச் சார்ந்த சதீஷ் மற்றும் அனில், ‘கட்டப்பாவ காணோம்’ பட இயக்குநர் மணி, ‘பேச்சுலர்’ பட இயக்குநர் சதீஷ், ‘ஓ மணப்பெண்ணே’ பட இயக்குநர் கார்த்திக் சுந்தர், எஸ் பி சினிமாஸ் சங்கர் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியாகி தேசிய விருதைப் பெற்ற ‘காக்கா முட்டை’ படத்திற்கு இசையமைத்தவர் ஜீ.வி. பிரகாஷ் குமார். இந்த இரண்டு திறமைசாலிகளும் முதன்முறையாக இணைந்து நடிக்கவிருப்பதால் இப்படத்தின் அறிவிப்பின்போதே ரசிகர்களிடத்தில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.