தேனியில் சேதமடைந்து கிடந்த அரசு பள்ளியை நடிகர் கார்த்தி அவரது நண்பர்கள் மற்றும் அகரம் பவுண்டேஷன் உடன் இணைந்து சீரமைத்து கொடுத்துள்ளார். அவரை மனதார ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

நடிகர் கார்த்தியின் விர்மன் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 12ஆம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளதால் படத்திற்கான பிரமோஷன் பணிகள் பல இடங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று சென்னையில் நடத்தப்பட்ட பிரஸ்மீட்டில் கலந்து கொண்ட நடிகர் கார்த்தி படப்பிடிப்பின் பொழுது நடந்த விஷயம் ஒன்றை பகிர்ந்து இருக்கிறார்.

அதில் தேனி அருகே உள்ள கிராமத்தில் ஷூட்டிங் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, ஒரு மூதாட்டி வந்து அருகில் உள்ள பள்ளியை பார்க்க வருமாறு அழைத்தாராம். அப்போது ஷூட்டிங்கிற்கு நேரமானதால் பிறகு வந்து பார்ப்பதாக கூறிவிட்டு சென்ற கார்த்தி, பிறகு சென்று அந்த பள்ளியை பார்த்தபோது அதிர்ச்சி அடைந்து விட்டாராம்.

ஏனென்றால் அப்பள்ளி ஆங்காங்கே இடிந்து மிகவும் மோசமான நிலையில் இருந்ததாம். அதனால் நடிகர் கார்த்தி அதே பகுதியில் இன்ஜினியரிங் கல்லூரி நடத்தி வரும் தனது நண்பன் மற்றும் அருகில் உள்ள சில பெரிய மனிதர்களின் உதவியுடன் கார்த்தி சூர்யா நடத்தி வரும் அகரம் பவுண்டேஷனும் இணைந்து அந்த பள்ளியை சீரமைத்துள்ளனர். இதனால் அப்பள்ளியின் நிர்வாகத்தினர் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து பேசிய கார்த்தி, அரசு சார்பில் நிதி ஒதுக்கப்பட்டாலும் அது சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு சரியான வகையில் சென்று சேருவதில்லை என கூறினார். மேலும் இதுபோன்று சேதமடைந்து கிடக்கும் பள்ளிகளை சீரமைக்க சில பெரிய மனிதர்களும் முன்வர வேண்டும் என கார்த்தி கேட்டுக்கொண்டார். கார்த்தியின் இந்த செயலைப் பார்த்து வியந்து போன ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.