இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது அப்பாவான ரஜினியை நினைத்து வெளியிட்டு இருக்கும் நெகிழ்ச்சியான பதிவு வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத உச்ச நட்சத்திரமாக விளங்கி வருபவர் நடிகர் ரஜினிகாந்த். ரசிகர்கள் மத்தியில் என்றென்றும் சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்படும் இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ஜெயிலர் திரைப்படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்த பிறகு லால் சலாம் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் ரஜினியின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி வருகிறார். கிரிக்கெட்டை மையமாகக் கொண்டு பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் இப்படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் லீடிங் ரோலில் நடிக்க சிறப்பு தோற்றத்தில் நடிகர் ரஜினிகாந்த், முன்னாள் கிரிகெட் வீரர் கபில்தேவ் ஆகியோர் நடிக்கின்றனர்.

இதற்கான படப்பிடிப்பு பணிகளும் தற்போது பல்வேறு இடங்களில் நடைபெற்று வரும் நிலையில் சமீபத்தில் மும்பையில் நடைபெற்றதை தொடர்ந்து தற்போது புதுவையில் ‘லால் சலாம்’ படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பு 10 நாட்கள் நடைபெற உள்ள நிலையில் படப்பிடிப்பு தளத்திலிருந்து ரஜினியின் வீடியோக்கள் வெளியாகி வைரலானது . இந்த நிலையில் இப்படத்தில் ரஜினி நடிப்பது குறித்து இயக்குனரும் அவரது மகளும் ஆன ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருக்கும் நெகிழ்ச்சியான பதிவு அனைவரது கவனத்தையும் ஈர்த்து வைரலாகி வருகிறது.

அதில் அவர், “நான் உங்களை பார்க்கிறேன். நான் உங்களை வைத்து படமெடுக்கும் ஒருநாள் வரும் என்று நான் கற்பனை கூட செய்ததில்லை. நான் உங்களை மிகவும் மதிக்கிறேன். சிலசமயம் நான் உங்கள் வழியாக பார்க்கிறேன். பெரும்பாலான முறை உங்களுடன் இந்த உலகத்தை பார்க்கிறேன். ஒவ்வொரு நாளும் நீங்கள்தான் நான் என்பதை உணர்கிறேன் அப்பா. உங்களை அதிகமாக நேசிக்கிறேன்” என்று குறிப்பிட்டு பகிர்ந்து இருக்கிறார்.