மனித உணர்வுகளை பேசும் ‘சின்ன சின்ன ஆசை’ ஜூன் 19 முதல் திரையரங்குகளில்!

Web Ads

பாபுஜி புரொடக்ஷன்ஸ் சார்பில் அபிஜித் பாபுஜி தயாரிப்பில், வர்ஷா வாசுதேவ் எழுதி இயக்கியுள்ள உணர்வுபூர்வமான திரைப்படம் ‘சின்ன சின்ன ஆசை’. இந்தப் படம் வரும் ஜூன் 19ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. தமிழகம் முழுவதும் இப்படத்தை ஏஜிஎஸ் சினிமாஸ் வெளியிடுகிறது.

மனிதர்களின் மனதில் மறைந்து கிடக்கும் சிறிய சிறிய ஆசைகள், உணர்வுகள் மற்றும் வாழ்க்கைப் பயணத்தில் உருவாகும் உறவுகளின் அழகை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த ஃபீல்-குட் திரைப்படம், காசி நகரில் எதிர்பாராத விதமாக சந்திக்கும் ஒரு ஆண் மற்றும் பெண்ணின் வாழ்க்கையில் நிகழும் உணர்ச்சிகரமான தருணங்களை மையமாகக் கொண்டுள்ளது.

படத்தில் பிரபல மலையாள நடிகர் இந்திரன்ஸ், நடிகை மதுபாலா, தேசிய விருது பெற்ற நடிகை அபர்ணா பாலமுரளி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் தம்பி ராமையா, காளி வெங்கட், ஜாபர் சாதிக், விஷ்ணு அகஸ்தியா மற்றும் சாய் ஜனனி உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

குறிப்பாக, இதுவரை ரசிகர்கள் பார்த்திராத வித்தியாசமான கதாபாத்திரங்களில் இந்திரன்ஸ் மற்றும் மதுபாலா நடித்திருப்பதுடன், அபர்ணா பாலமுரளிக்கும் படத்தில் குறிப்பிடத்தக்க கதாபாத்திரம் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. தம்பி ராமையா மற்றும் காளி வெங்கட் ஆகியோர் கதைக்கு சுவாரஸ்யம் சேர்க்கும் வேடங்களில் நடித்துள்ளனர்.

‘96’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்த இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா, இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஆறு இனிமையான பாடல்களுடன் உருவாகியுள்ள இப்படத்தின் இசை உரிமையை திங்க் மியூசிக் கைப்பற்றியுள்ளது.

Web Ad 2

ஃபைஸ் சித்திக் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ரெக்சன் ஜோசப் படத்தொகுப்பு செய்துள்ளார். கலை இயக்கத்தை சாபு மோகனும், உடை வடிவமைப்பை சமீரா சனீஷும் கவனித்துள்ளனர். ஒலி வடிவமைப்பை ரெங்கநாத் ரவியும், ஒப்பனையை ரஞ்சித் அம்பாடியும் மேற்கொண்டுள்ளனர்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் உருவாகியுள்ள ‘சின்ன சின்ன ஆசை’, சென்சார் வாரியத்திடம் இருந்து ‘யு’ சான்றிதழ் பெற்றுள்ளது.

படம் குறித்து படக்குழுவினர் கூறுகையில், “ஒவ்வொரு மனிதரின் மனதிலும் சொல்லப்படாத பல சின்ன சின்ன ஆசைகள் இருக்கின்றன. அந்த நுண்ணிய உணர்வுகளின் அழகையும் உண்மையையும் எந்தவித சமரசமும் இல்லாமல் திரையில் கொண்டு வர முயன்றிருக்கிறோம். அனைத்து தரப்பு ரசிகர்களும் தங்களை இந்தக் கதையுடன் இணைத்துக் கொள்ளும் வகையில் படம் உருவாகியுள்ளது” என தெரிவித்துள்ளனர்.

மனதை வருடும் கதைக்களம், வலுவான நடிப்பு, இனிமையான இசை மற்றும் அழகான காட்சியமைப்புகளுடன் உருவாகியுள்ள ‘சின்ன சின்ன ஆசை’, இந்த மாதம் ரசிகர்களுக்கு ஒரு இனிய திரையரங்க அனுபவமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.