சந்திரமுகி 2 இசை வெளியீட்டு விழாவில் பேசிய இசையமைப்பாளர் கீரவாணியின் பேச்சு வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக இடம் பிடித்திருப்பவர் பி.வாசு. இவரது இயக்கத்தில் ரஜினியின் நடிப்பில் சந்திரமுகி திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றிருந்தது. தற்போது நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு இப்படத்தின் இரண்டாம் பாகத்தை பி.வாசு அவர்கள் இயக்கியுள்ளார். இதில் வேட்டையன் ராஜாவாக ராகவா லாரன்ஸ் நடிக்க நடிகை கங்கனா ராணாவத் சந்திரமுகி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவர்களுடன் இணைந்து வடிவேலு, ராதிகா சரத்குமார், லக்ஷ்மி மேனன், மனோபாலா, சிருஷ்டி டாங்கே உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு எம்.எம் கீரவாணி இசையமைத்துள்ளார். ‘சந்திரமுகி 2’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் வரும் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகவுள்ளது. சமீபத்தில் இப்படத்தில் இருந்து வெளியான போஸ்டர்கள் மற்றும் பாடல்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது.

இந்நிலையில், நேற்றைய தினம் நடைபெற்ற இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் வடிவேலு குறித்து உரையாடிய பிரபல இசையமைப்பாளர் கீரவாணியின் பேச்சு வைரலாகி வருகிறது. அதில் அவர், “வடிவேலு இல்லையென்றால் சந்திரமுகியே கிடையாது என்று கூறியிருக்கிறார். அதன் பிறகு சந்திரமுகி 2 திரைப்படத்தை முதல் முறை அனைவரும் பார்ப்பார்கள், ஆனால் இரண்டாவது மூன்றாவது முறை வடிவேலுவுக்காக மட்டுமே பார்க்க வருவார்கள்” என்று தெரிவித்திருக்கிறார். இவரது இந்த தகவல் இப்படத்தில் இடம் பெற்றிருக்கும் வடிவேலுவின் காட்சிகளை காண ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.