இணையவழி துன்புறுத்தலுக்கு தண்டனை வேண்டும்: நடிகை ஹூமா குரேஷி வலியுறுத்தல்..

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘காலா’, அஜித்தின் ‘வலிமை’ ஆகிய படங்களில் நடித்த ஹிந்தி நடிகை ஹூமா குரேஷி, தற்போது யாஷின் ‘டாக்ஸிக்’ உள்பட சில படங்களில் நடித்து வருகிறார். இவர், பெண்களுக்கு எதிரான இணையவழி துன்புறுத்தல், ஈவ்-டீசிங் உள்ளிட்ட தொல்லைகள் குறித்துக் கூறும்போது,
‘எனது சமூக வலைதளப் பக்கத்தில் சிலர், ‘உங்களுடைய பிகினி புகைப்படத்தைப் பகிருங்கள்’ என கேட்கிறார்கள். இது அருவருப்பானது, அதுபோன்ற கருத்துகள் மிகவும் வேதனையளிக்கிறது.
ஒரு பெண்ணை உடல் ரீதியாகவோ அல்லது தெருவில் துன்புறுத்தியதற்காகவோ கொடுக்கப்படுவதைப் போல, இணையவழி துன்புறுத்தலுக்கும் தண்டனை வழங்கப்பட வேண்டும். இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. ஆன்லைன் துஷ்பிரயோகத்தை, தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
அடிப்படையான ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். தயவுசெய்து பெண்களின் உடைகள், ஒப்பனை, அவர்கள் என்ன செய்கிறார்கள், எந்த நேரத்தில் வீட்டுக்கு வருகிறார்கள், அவர்களின் எடை என்ன? என்பது பற்றி கருத்து தெரிவிப்பதை நிறுத்துங்கள்’ என ஆவேசமாய் பேசியுள்ளார்.

