பிரபல தெலுங்கு நடிகர் சுனில் இணைந்திருக்கும் புதிய திரைப்படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது.

தெலுங்கு திரை உலகில் காமெடி நடிகராக அறிமுகமாகி ஹீரோ, வில்லன் என பல வேடங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் சுனில். இவர் தெலுங்கு திரைப்படங்கள் மட்டுமின்றி பிறமொழி படங்களிலும் நடித்திருக்கிறார். தமிழில் மாவீரன் திரைப்படத்தில் நடித்திருந்த நடிகர் சுனில் ரஜினியின் ஜெயிலர் திரைப்படத்திலும் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தார். தற்போது விஷாலின் மார்க் ஆண்டனி திரைப்படத்தில் நடித்திருக்கும் அவர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள கேம் சேஞ்சர் திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

இப்படி தொடர்ந்து தமிழ் படங்களில் கவனம் செலுத்தி வரும் நடிகர் சுனில் தற்போது புதிய படமாக “புல்லட்” என்னும் திரைப்படத்தில் இணைந்து இருக்கிறார். ராகவா லாரன்ஸின் தம்பி எல்வின் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தை ‘டைரி’ படத்தை இயக்கிய இன்னாசிப் பாண்டியன் இயக்க பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிக்கிறார். ராகவா லாரன்ஸ் சிறப்பு கௌரவ வேடத்தில் நடிக்க இருக்கும் இப்படத்தில் நடிகர் சுனில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இதுகுறித்து படக்குழு அறிவித்திருக்கும் போஸ்டர் வைரலாகி வருகிறது.