ரோபோ சங்கரை தூக்கிவர ‘கேங்லீடர்’ ரமேஷ் கண்ணா உத்தரவு: இமான் அண்ணாச்சி சுவாரஸ்ய தகவல்
‘அம்பி’ படத்தில் ரோபோ சங்கர் கதையின் நாயகனாக நடித்துள்ளார். இப்படத்தின் சுவாரஸ்ய நிகழ்வுகள் பற்றி இமான் அண்ணாச்சி பகிர்ந்துள்ள தகவல்கள் காண்போம்..
தமிழ் திரையில் இயக்குனர் பி.வாசுவின் மகன் ஷக்தி நடிப்பில் ‘ஏதோ செய்தாய் என்னை’ மற்றும் மலையாளத் திரையில் பிரதீஷ் நடிப்பில் ‘ரூல் நம்பர்-4’ ஆகிய படங்களை இயக்கியவர் பாஸர் ஜே எல்வின். இவர், தற்போது ரோபோ சங்கர் கதையின் நாயகனாக நடிக்கும் ‘அம்பி’ படத்தை தயாரித்து இயக்கியுள்ளார். இப்படம், கோடை விடுமுறையை முன்னிட்டு மே மாதம் ரிலீஸாகிறது.
இப்படம் குறித்து இயக்குனர் எல்வின் தெரிவிக்கையில்,
‘படத்தில் கிளாமர், டபுள் மீனிங் இல்லாமல் அனைவரும் ரசிக்கிற ஃபேமிலி என்டர்டெய்னர் மூவி. கதைச்சுருக்கம் என்னவென்றால், மூன்று அக்கா தங்கைகளோடு பிறந்த ஒரு அப்பாவி கேரக்டர் அம்பி. அப்பா இல்லாத நிலையில் குடும்பத்தில் கஷ்டம்.
இதனால், வெளிநாடு போய் சகோதரிகளுக்கு திருமணம் செய்து வைத்து, அம்பி செட்டில் ஆகும்போது வயது நாற்பதை தாண்டி விடுகிறது. இந்நிலையில், சகோதரிகள் மூவரும் அம்பிக்கு திருமணம் செய்து வைத்தார்களா? என்கிற சுவாரஸ்ய நிகழ்வுகளாக விவரிக்கிறது இப்படம். ஆனால், இதனை புதிய பரிமாணத்தில் திரைக்கதையாக வடிவமைத்திருக்கிறேன்’ என்றார்.
இப்படத்தில் ஜிவி, மரகதக்காடு போன்ற படங்களில் நடித்த அஸ்வினி கதாநாயகியாக இணைந்துள்ளார். மேலும் ரமேஷ் கண்ணா, இமான் அண்ணாச்சி, நமோ நாராயணா, கஞ்சா கருப்பு, மோகன் வைத்யா உள்ளிட்ட காமெடி பட்டாளங்களும் கலக்கியுள்ளனர்.
முன்னதாக, கமல்ஹாசன் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும், ஜி.வி.பிரகாஷ் குமார் ஒரு பாடலையும் வெளியிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இப்படம் குறித்து இமான் அண்ணாச்சி தெரிவிக்கையில்,
‘இயக்குனர் எல்வின் என் வீட்டுக்கு வந்து என்னிடம் கதை சொன்னார். ரொம்ப ஜாலியா ட்ராவல் பண்ற கதை. ஷூட்டிக்கை பொறுத்தவரைக்கும், கள்ளக்குறிச்சி அருகேயுள்ள கிராமத்தில் 13 நாட்கள் நடந்தது. அந்த ஒவ்வொரு நாளும் ரொம்ப ஜாலியாக இருந்தது.
ரோபோ சங்கர், ரமேஷ் கண்ணா, கஞ்சா கருப்பு, கோவை பாபு, மீசை ராஜேந்திரன் என ஒவ்வொருவரும் தங்களது அனுபவங்களை கலகலப்பாக பேசி மகிழ்ந்தோம். இந்த படத்தில் சப்போர்ட்டிங் ஆர்டிஸ்ட்டா பண்ணிருக்கோம்.
அதாவது, ரோபோ சங்கர்கிட்ட வித்தியாசமான ஒரு சக்தி இருக்கும். அதனால எங்க தலைவரு ‘கேங்லீடர்’ ரமேஷ் கண்ணா ‘அவரை தூக்கிட்டு வாங்கப்பா. அவரை வீட்ல வெச்சு சாப்பாடு போட்டா நல்ல சம்பவங்கள் நடக்கம்னு கேள்விப்பட்டேன்னு’ சொல்லுவார். நாங்க ரோபோ சங்கரை தூக்கிட்டு வந்திருவோம். படம், எதிர்பார்த்த மாதிரி ரொம்ப நகைச்சுவையா வந்திருக்கு.
மேலும் கோலிசோடா-3, மரகத நாணயம்-2, போன்ற படங்களிலும் நடித்து வருகிறேன்’ என சிரிப்பு மத்தாப்பூவாய் தெரிவித்தார் இமான் அண்ணாச்சி. ஆக, குடும்பத்துடன் பார்த்து மகிழ்வோம்; அம்பியை அனைவரும் வரவேற்போம்.!