ராமராக ரன்பீர் கபூர்-சீதையாக சாய் பல்லவி: நாளை கிளிம்ஸ் வீடியோ ரிலீஸ்..
பாலிவுட் திரைப்பட இயக்குநர் நிதேஷ் திவாரி, ராமாயணக் கதையைத் திரைப்படமாக இயக்குகிறார். இப்படம் இரண்டு பாகங்களாக உருவாகிறது.
இப்படத்தில், ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும் யாஷ் ராவணனாகவும் நடிக்கின்றனர். சன்னி தியோல் அனுமனாக நடிக்கிறார். ராவணன் மனைவி மண்டோதரியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட பல்வேறு மொழிகளில் இப்படம் உருவாகிறது. பிரம்மாண்டமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த வருடம் தொடங்கியது.
முதல் பாகம் 2026-ம் ஆண்டு தீபாவளிக்கும் இரண்டாம் பாகம் 2027-ம் ஆண்டு தீபாவளிக்கும் வெளியாகும் என்று படக்குழு ஏற்கெனவே அறிவித்துள்ளது. இந்நிலையில், இதன் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. கடைசி நாள் படப்பிடிப்பில் ரன்பீர் கபூர், படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்தார்.
தனது நடிப்பு வாழ்க்கையில் ராமராக நடித்திருப்பது முக்கியமானது என்ற ரன்பீர் கபூர், இதில் நடித்துள்ள சாய் பல்லவி, யாஷ் ஆகியோரையும் பாராட்டி, நன்றி சொன்னார். இந்தப் படத்தின் முதல் கிளிம்ப்ஸ் வீடியோ நாளை வெளியாக இருக்கிறது.
